Sunday, May 31, 2020

இராஜேந்திர சோழன் சிலை மானம்பாடி கோயில்

இராஜேந்திர சோழன் கட்டிய மானம்பாடி நாகநாத சுவாமி கோயிலில் அவனது உருவம் மற்றும் அவன் மனைவி,மகன்கள் உருவங்கள் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இரா.விக்ரமன்,சிதம்பரம்.

Wednesday, May 27, 2020

இராஜராஜ சோழன் கட்டிய திருப்புகலூர் கோயில்

அக்னிபகவான் வழிபட்டதால் அக்னிபுரிஸ்வரர் என இறைவன் அழைக்கப்படுகிறார்.இறைவி கருந்தாழ்குழலி.திருநாவுக்கரசர் உழவாரப் பணி செய்து முக்தி பெற்ற தலம்.சுந்தரருக்கு செங்கல்லை பொன்கற்களாக இறைவன் மாற்றிய தலம்.முருகநாயனார் அவதாரம் செய்த கோயில்.திருஞானசம்பந்தர் பாடல்ப்பெற்ற தலம்.இக்கோயில் பழையான கல்வெட்டுகள் இராஜராஜ சோழன் கல்வெட்டே ஆகும்.செங்கல் கோயிலாக இருந்த கோயிலை இராஜராஜ சோழன் கருங்கல் கோயிலாக மாற்றியிருக்கலாம் என கூறுகின்றர்.இதன் தெற்கு திருவாயிலுக்கு இராஜராஜன் வாயில் என்று பெயர்.இவ்வூர் ராஜராஜன் காலத்தில் சத்திரியசிகாமணி வளநாடு,மும்முடி சோழ வளநாடு பனையூர் நாட்டு பிரம்மதேயமான புகலூர் என அழைக்கப்பட்டது. இக்கோயில் அர்த்த மண்டபத்தை கட்டியவன் இறையூர் உடையான் கங்கைகொண்டானான சோழ விச்சாதரப் பல்லவரையன். நீராழி மண்டபத்தை திருப்பணி செய்தவன் ஆர்க்காடு கிழான் சேதிராயன் ஆவான்.நரலோக வீரன் மண்டபம் ஒன்று இருந்தது.அதில் சத்திரியநாத சதுர்வேதிமங்கலத்தார் கூட்டம் கூடினர்.மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் அகழி தோண்டப்பட்டது.ராசாக்கள் தம்பிரான் வீதி ஓன்று இவன் பெயரில் இருந்தது.இவ்வூரில் முடிகொண்ட சோழப் பேராற்றின் வடகரையில் ஒரு மருத்துவமனை இருந்தது.இங்கு உள்ள நோயாளிகளுக்கு தினமும் உணவு அளிப்பதற்கு இராசநாரயண வளநாட்டு திருவழுந்தூர் நாட்டு தேவூரில் முதல் குலோத்துங்க சோழன் நிலம் விட்டுருந்தான்.
திருமேனிகள்.
முதல் இராஜேந்திர சோழன் 11 ஆம் ஆண்டு ஆட்சியில் தேவன் பட்டகன் பண்டாரமும் சிவபாதசேகரத் தெரிந்த திருமஞ்சனத்தார் வேளத்தைச் சேர்ந்த அவரது மகள்களும் சூரியதேவரையும் அவர் இரண்டு பிராட்டியாரையும் இக்கோயிலில் எழுந்தருளவித்தனர். முதல் இராஜாதிராஜ 32 ஆம் ஆண்டு ஆட்சியில் இக்கோயிலில் சிவபுரத்துத் தேவரை எழுந்தருளவித்தனர். இரண்டாம் இராஜராஜன் 5 ஆம் ஆண்டு இராசராச மங்கலத்தரையர் இடபவாகன தேவரையும்,இராஜராஜ விடங்கரையும் இக்கோயிலில் எழுந்தருளவித்தனர்.
இங்கு முருநாயனார் திருமடம் ஒன்று இருந்தது.சேரமான் குகை ஒன்றும் இருந்தது. இரா.விக்ரமன்,சிதம்பரம்.

Saturday, May 23, 2020

ஒலோகமாதேவியார் இரண்யகருப்ப தானம் திருவியலூர்க் கோயில்

இராஜராஜ சோழன் 29 ஆம் ஆண்டு கி.பி.1014 இல் திருவியலூர்க் கோயிலில் துலாபாரம் புகுந்தான் அப்போது அவன் பட்டத்தரசி தந்திசக்தி விடங்கியரான ஒலோகமாதேவியார் இரண்யகருப்பம் புகுந்தார்.
துலாபாரம் தானம் என்பது புதிதாக மண்டபம் அமைத்து அரசன் துலாக்கோலில் அமர்ந்து எடைக்கு எடை தங்கம் வைத்து அதை பிராமணர்களுக்கும் கோயிலுக்கும் தானம் அளித்தல் இது ஆண்கள் மட்டுமே செய்கின்ற தானம் துலாபுருஷானதானம் எனப்படும்.
இரண்யகருப்பம் தானம் என்பது தங்கத்தால் பசுமாடு செய்து அதன் வயிற்றில் புகுந்து வெளியில் வந்து அந்த மாட்டையும் நிலத்தையும் பிராமணர்களுக்கு தானம் வழங்க வேண்டும்." ஸ்ரீ கோவிராஜ கேசரி பன்மரான ஸ்ரீ ராஜராஜ தேவர்க்கு யாண்டு  29 ஆவது இராஜேந்திர சிங்கவளநாட்டு மண்ணிநாட்டு பிரம்மதேயம் வேப்பற்றூரகிய சோழ மார்த்தாண்ட சதுர்வேதி மங்கலத்து மகா சபையோம் கையெழுத்து நம்மையுடைய சக்கரவர்த்தி உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர் இவ்வூர் திருவிசலூர்  மகாதேவர் ஸ்ரீ கோயிலிலே துலாபாரம் புக்கருளின அன்று நம்பிராட்டியார் தந்திசத்தி விடங்கியார் இரண்யகருப்பம் புக்கருளி இத்திருவிசலூர் மகாதேவர்க்கு அக்காரவடிசில் அமுதுக்கு வேண்டும் நிபந்தகளுக்காக வைச்ச காசு" என கல்வெட்டு குறிப்பிடுகிறது.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

Friday, May 22, 2020

அரிஞ்சிகை ஈச்சுரம் மேல்பாடி

இராஜராஜ சோழன் தனது 29 ஆம் ஆட்சி ஆண்டில் கி.பி.1014 இல் தொண்டை மண்டலமான ஜெய கொண்ட சோழமண்டலத்தில் மேற்பாடியாகிய இராசாச்ரயபுரத்தில் தேவதானமாக இறையிலியாக அந்நகரத்தாரிடம் இருந்து நிலம் வாங்கி தன் பாட்டன் அரியஞ்சய சோழனுக்கு திருஅரிஞ்சிகையிச்சுரம் எனும் பள்ளிப்படை கோயிலை எடுப்பித்தான்.
"ஸ்ரீ கோவி ராஜகேசரி பன்மரான ஸ்ரீ ராஜ ராஜ தேவர்க்கு யாண்டு 29 ஆவது  ஜயகொண்ட சோழ மண்டலத்து பெரும்பாணப்பாடித் தூஞாட்டு மேற்பாடியாகிய ராசாச்ரயபுரத்து நகரத்தோம் ஆற்றூர்த்துஞ்சின தேவர்க்கு பள்ளிப்படையாக உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர் எங்கள் நகரத்திலெடுபித்தருளின திரு அரிஞ்கைஈச்வரத்து மாகதேவர் ஸ்ரீ கோயிலுக்குத் திருச்சுற்றாலைக்குத் திருமுற்றத்திற்குத் திருநந்த வனத்துக்கும் மடவிளாகத்துக்குமாக நாங்களித் தேவர்ற்குக் கொடுத்த நிலத்துக்கெல்லை"

Wednesday, May 20, 2020

கங்கை கொண்ட சோழபுரம் இராஜேந்திர சோழன் அரண்மனை

இராஜேந்திர சோழன் தன் தலைநகரை தஞ்சையில் இருந்து மாற்றி இங்கு புதிய நகரை உருவாக்கினான்.இங்கு அவன் மிக அழகிய அரண்மனை ஒன்று எடுப்பித்தான்.அரண்மனை செங்கல், சுண்ணாம்பு, மரம் போன்றவற்றை கொண்டும் சில இடங்களில் கருங்கற்களை பயன்படுத்தி அமைத்தனர்.அதன் மேல் பகுதியை சுட்டோட்டால் எடுத்திருந்தனர் என்பதை இராஜேந்திர சோழன் கரந்தை செப்பேட்டில் "சுட்டோட்டால் மாடமாளிகை எடுக்கப்பெறுவதாகவும்" என கூறப்பட்டுள்ளது.அரண்மனையில் கருங்கற் தெய்வ சிற்பங்களை ஒவ்வொரு வாயிலிலும், வழிப்பாட்டு அறைகளிலும் வைத்து வழிப்பட்டனர்.கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் தனது மூவருலாவில் கங்கை கொண்ட சோழபுரத்தில் அமைந்திருந்த வீதிகளையும் அவற்றின் இருபுறமும் எழுப்பட்டிருந்த பல அடுக்குமாடிகளை கொண்ட மாளிகைகளைப் பற்றி கூறியுள்ளார்.அவை காஞ்சனமாடம்,நெடுமாடம்,வெண் பளிங்கு மாடம்,கோபுரமாடம், மைம்மழைமாடம்,நிலா முற்றம், முன்றில், மணிமுன்றில்,முகின்மாட முன்றில்,மேகைநிலா முற்றம், இந்து சிலாதளம்,விலாதலம்,மணிமாளிகை பீடிகை,மன்றம்,அங்கணம்,கூடம்,பளிக்கறை வேதிகை,வீழ்மகரப் பேழ்வாய்,சாளரம்,சூணிகை மாடம்,வாயில்,தெற்றி,தாழ்வாரை போன்ற பகுதிகளை கொண்டதாக அவை விளங்கியது. இங்கு அரண்மனை இருந்ததற்கான செய்திகள் "இராஜாதிராஜன் கங்கைகொண்ட சோழபுர வீட்டின் உள்ளால் மாளிகையில் சோபனத்தில் எழுந்தருளியிருந்து".வீர ராஜேந்திரன் சோழகேரளன் மாளிகை என்னும் அரண்மனையில் இராஜேந்திர சோழ மாவிலி வாணராயன் என்ற அரியணையில் வீற்றிருந்து அறங்கள் புரிந்தமை."கங்கை கொண்ட  சோழபுரத்து வீட்டினுள்ளால் குளிக்கு மாடத்து தானஞ்செய் தருளாயிருந்து".
"ராஜேந்திரதேவன் கங்கை கொண்ட சோழபுரத்து கேரளன் மாளிகையில் சோபான காடுவெட்டியில் எழுந்தருளியிருந்து"."உடையார் ஸ்ரீ ராஜேந்திரதேவர் கங்கைகொண்ட சோழபுரத்துக் கோயிலினுள்ளால் முடிகொண்ட சோழன் திருமாளிகையில் வடபக்கத்து தேவாரத்து சுற்றுக்கல்லூரில் தானஞ் செய்தருளாயிருந்து"."கங்கைகொண்ட சோழபுரத்து கங்கை கொண்ட சோழன்  திருகொற்றவாசலில் புறவாயில் சேனாபதி". "கங்கைகொண்ட சோழபுரத்து வீர சோழன் மாளிகையில்". 1070 ஆம் ஆண்டு அதிராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரம் அரண்மனையிருந்து திருப்பாசூர்க் கோயிலுக்கு தேவதானமாக சேலை என்ற ஊரை இறையிலியாக அளித்தான். இவற்றை போன்ற பல கல்வெட்டுகள் இங்கு அரண்மனை இருந்ததை உறுதி செய்கிறது.இந்த மாளிகையின் சில பகுதிகள் முடிகொண்ட சோழன்  திருமாளிகை, சோழ கேரளன் திருமாளிகை, வீர சோழன் திருமாளிகை என்னும் பெயர்கள் பெற்றிருந்தன.கங்கை கொண்ட சோழபுரம் முதல் இராஜேந்திர சோழன் காலம் முதல் மூன்றாம் இராஜேந்திர சோழன் காலம் வரையிலான சோழ மன்னர்கள் வீற்றிருந்து செங்கோல் செலுத்தி ஆட்சி புரிந்த திருவுடை நகரமாக இருந்தன.தற்போது அரண்மனை இருந்த இடம் மாளிகை மேடு என அழைக்கப்படுகிறது.தொல்லியல் துறையினர் இங்கு அகழாய்வு செய்து பல பொருட்களை கண்டறிந்து உள்ளனர்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

Sunday, May 17, 2020

சோழ மன்னர்கள் தில்லையில் முடி சூடுதல்

சோழ மன்னர்கள் தில்லை நடராஜ பெருமானை தம் குல தெய்வமாக கொண்டு வழிப்பட்டு இங்கு முடி சூட்டி கொண்டனர்.இக்கோயிலில் சிற்றம்பலத்தை பலமுறை பொன்வேய்ந்து பல திருப்பணிகள் செய்துள்ளனர்.இவ்வூரில் அரண்மனை அமைத்தும் தங்கி இருந்தனர்.நடராஜ பெருமான் தங்கள் குல தெய்வம் என்பதனை விக்கிரம சோழனின் திருமழப்பாடி கல்வெட்டு "தன்குல நாயகன் தாண்டவம் பயிலும் செம்பொன் அம்பலஞ்சூழ் திருமாளிகையும்" என குறிப்பிடுகிறது.இரண்டாம் குலோத்துங்க சோழன் இங்கு முடி சூட்டி கொண்டதை திருமாணிகுழி கல்வெட்டு "ஸ்ரீ இராச கேசரிபன்மரான திருபுவனச் சக்கரவர்த்திகள் தில்லைத் திருநகர் சிறப்புடைத்தாகத் திருமுடி சூடிய ஸ்ரீகுலோத்துங்க சோழர்தேவர்க்கு யாண்டு எட்டாவது" எனக் குறிக்கப்பட்டுள்ளது.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

Thursday, May 14, 2020

கரைவீரம் பார்வதி செப்புத் திருமேனி

கல்வெட்டு பொறிக்கப்பட்ட பார்வதி திருமேனி.
கரைவீரம் திருக்கோயிலில் உள்ள பார்வதி செப்புத் திருமேனியின் பீடத்தில் உள்ள கல்வெட்டு
மதுரை கொண்ட பரகேசரி என்ற சிறப்புப் பெயருடைய பராந்தக சோழனின் ஆட்சிக் காலத்தில் கி.பி.917 இல்  பிரம்ம ஸ்ரீ கொங்கர் என்பவருக்காக இந்த உமா படாரகி திருமேனி வடிக்கப்பட்டமையை அக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.இந்த திருமேனியின் உருவ அமைப்பை கொண்டு பல செப்புத் திருமேனிகளின் காலத்தை கணிப்பது சுலபமாக இருக்கின்றது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

Wednesday, May 13, 2020

திரிபுராந்தகர் திருப்புறம்பய திருக்கோயில்

முதல் ஆதித்த சோழன் காலத்தில் கி.பி.10 ஆம் நூற்றாண்டில் திருப்புறம்பய கோயிலில் எடுக்கப்பட்ட திரிபுராந்தகர் செப்புத் திருமேனி.

Tuesday, May 5, 2020

தில்லை சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்த முதல் பராந்தக சோழன்

வெள்ளிமலை வாசனான திரிபுரம் எரித்த  சிவபெருமானின் தில்லை சிற்றம்பலத்தை பொன் வேய்ந்தான் பராந்தக சோழன்.இதனால் சிவபெருமானுடைய நண்பனும் செல்வத்துக்கு அதிபதியுமான குபேரன் வெட்கப்பட்டான் என திருவாலங்காட்டு செப்பேடு குறிப்பிடுகிறது.சூரிய குலத்தின் கொடி போன்ற இவன் ஆற்றலினாலே எல்லா இடங்களையும் வென்று அவ்விடங்களிலிருந்து கொண்டு வந்த தூய பொன்னினாலே புலியூரில் சிவபெருமானுடைய விமானத்தை வேய்ந்தான் என ஆனைமங்கல செப்பேடு குறிப்பிடுகிறது.பராந்தகன்,சிறந்த சிவபக்திச் செல்வம் வாய்க்கப் பெற்றவனாதலின், தில்லைச் சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்து அதனை உண்மையில் பொன்னம்பலமாக்கினான். இச்செய்தியை ஆனைமங்கலச் செப்பேடுகளிலும் திருவாலங்காட்டு செப்பேடுகளிலும் கண்டோம். இவற்றை தவிர இச்செய்தியை,
 'வெங்கோல் வேந்தன் தென்னாடும்ஈழமும் கொண்டதிறற் செங்கோற் சோழன் கோழிவேந்தன் செம்பியன் பொன்னணிந்த அடிகோல் வளையார் பாடியாடும் அணி
தில்லையம்பலம்'
என முதல் கண்டராதித்த சோழன் தன் தந்தை பராந்தக சோழனை தனது கோயிற் பதிகத்தில் போற்றி புகழ்ந்துள்ளான்.மேலூம்
'கோதிலாத் தேறல் குனிக்குந் திருமன்றங் காதலாற் பொன்வேய்ந்த காவலனும்'
என்று கவிச்சக்கரவர்த்தியாகிய ஒட்டக்கூத்தரும் விக்கிரம சோழன் உலாவில் பராந்தக சோழனை போற்றிப் புகழ்ந்திருத்தல் அறியற்பாலதொன்றாம்.
*பிற்கால சோழர் வரலாறு. தி.வை.சதாசிவப்பண்டாரத்தார்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...