Wednesday, May 20, 2020

கங்கை கொண்ட சோழபுரம் இராஜேந்திர சோழன் அரண்மனை

இராஜேந்திர சோழன் தன் தலைநகரை தஞ்சையில் இருந்து மாற்றி இங்கு புதிய நகரை உருவாக்கினான்.இங்கு அவன் மிக அழகிய அரண்மனை ஒன்று எடுப்பித்தான்.அரண்மனை செங்கல், சுண்ணாம்பு, மரம் போன்றவற்றை கொண்டும் சில இடங்களில் கருங்கற்களை பயன்படுத்தி அமைத்தனர்.அதன் மேல் பகுதியை சுட்டோட்டால் எடுத்திருந்தனர் என்பதை இராஜேந்திர சோழன் கரந்தை செப்பேட்டில் "சுட்டோட்டால் மாடமாளிகை எடுக்கப்பெறுவதாகவும்" என கூறப்பட்டுள்ளது.அரண்மனையில் கருங்கற் தெய்வ சிற்பங்களை ஒவ்வொரு வாயிலிலும், வழிப்பாட்டு அறைகளிலும் வைத்து வழிப்பட்டனர்.கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் தனது மூவருலாவில் கங்கை கொண்ட சோழபுரத்தில் அமைந்திருந்த வீதிகளையும் அவற்றின் இருபுறமும் எழுப்பட்டிருந்த பல அடுக்குமாடிகளை கொண்ட மாளிகைகளைப் பற்றி கூறியுள்ளார்.அவை காஞ்சனமாடம்,நெடுமாடம்,வெண் பளிங்கு மாடம்,கோபுரமாடம், மைம்மழைமாடம்,நிலா முற்றம், முன்றில், மணிமுன்றில்,முகின்மாட முன்றில்,மேகைநிலா முற்றம், இந்து சிலாதளம்,விலாதலம்,மணிமாளிகை பீடிகை,மன்றம்,அங்கணம்,கூடம்,பளிக்கறை வேதிகை,வீழ்மகரப் பேழ்வாய்,சாளரம்,சூணிகை மாடம்,வாயில்,தெற்றி,தாழ்வாரை போன்ற பகுதிகளை கொண்டதாக அவை விளங்கியது. இங்கு அரண்மனை இருந்ததற்கான செய்திகள் "இராஜாதிராஜன் கங்கைகொண்ட சோழபுர வீட்டின் உள்ளால் மாளிகையில் சோபனத்தில் எழுந்தருளியிருந்து".வீர ராஜேந்திரன் சோழகேரளன் மாளிகை என்னும் அரண்மனையில் இராஜேந்திர சோழ மாவிலி வாணராயன் என்ற அரியணையில் வீற்றிருந்து அறங்கள் புரிந்தமை."கங்கை கொண்ட  சோழபுரத்து வீட்டினுள்ளால் குளிக்கு மாடத்து தானஞ்செய் தருளாயிருந்து".
"ராஜேந்திரதேவன் கங்கை கொண்ட சோழபுரத்து கேரளன் மாளிகையில் சோபான காடுவெட்டியில் எழுந்தருளியிருந்து"."உடையார் ஸ்ரீ ராஜேந்திரதேவர் கங்கைகொண்ட சோழபுரத்துக் கோயிலினுள்ளால் முடிகொண்ட சோழன் திருமாளிகையில் வடபக்கத்து தேவாரத்து சுற்றுக்கல்லூரில் தானஞ் செய்தருளாயிருந்து"."கங்கைகொண்ட சோழபுரத்து கங்கை கொண்ட சோழன்  திருகொற்றவாசலில் புறவாயில் சேனாபதி". "கங்கைகொண்ட சோழபுரத்து வீர சோழன் மாளிகையில்". 1070 ஆம் ஆண்டு அதிராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரம் அரண்மனையிருந்து திருப்பாசூர்க் கோயிலுக்கு தேவதானமாக சேலை என்ற ஊரை இறையிலியாக அளித்தான். இவற்றை போன்ற பல கல்வெட்டுகள் இங்கு அரண்மனை இருந்ததை உறுதி செய்கிறது.இந்த மாளிகையின் சில பகுதிகள் முடிகொண்ட சோழன்  திருமாளிகை, சோழ கேரளன் திருமாளிகை, வீர சோழன் திருமாளிகை என்னும் பெயர்கள் பெற்றிருந்தன.கங்கை கொண்ட சோழபுரம் முதல் இராஜேந்திர சோழன் காலம் முதல் மூன்றாம் இராஜேந்திர சோழன் காலம் வரையிலான சோழ மன்னர்கள் வீற்றிருந்து செங்கோல் செலுத்தி ஆட்சி புரிந்த திருவுடை நகரமாக இருந்தன.தற்போது அரண்மனை இருந்த இடம் மாளிகை மேடு என அழைக்கப்படுகிறது.தொல்லியல் துறையினர் இங்கு அகழாய்வு செய்து பல பொருட்களை கண்டறிந்து உள்ளனர்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...