Tuesday, May 5, 2020

தில்லை சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்த முதல் பராந்தக சோழன்

வெள்ளிமலை வாசனான திரிபுரம் எரித்த  சிவபெருமானின் தில்லை சிற்றம்பலத்தை பொன் வேய்ந்தான் பராந்தக சோழன்.இதனால் சிவபெருமானுடைய நண்பனும் செல்வத்துக்கு அதிபதியுமான குபேரன் வெட்கப்பட்டான் என திருவாலங்காட்டு செப்பேடு குறிப்பிடுகிறது.சூரிய குலத்தின் கொடி போன்ற இவன் ஆற்றலினாலே எல்லா இடங்களையும் வென்று அவ்விடங்களிலிருந்து கொண்டு வந்த தூய பொன்னினாலே புலியூரில் சிவபெருமானுடைய விமானத்தை வேய்ந்தான் என ஆனைமங்கல செப்பேடு குறிப்பிடுகிறது.பராந்தகன்,சிறந்த சிவபக்திச் செல்வம் வாய்க்கப் பெற்றவனாதலின், தில்லைச் சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்து அதனை உண்மையில் பொன்னம்பலமாக்கினான். இச்செய்தியை ஆனைமங்கலச் செப்பேடுகளிலும் திருவாலங்காட்டு செப்பேடுகளிலும் கண்டோம். இவற்றை தவிர இச்செய்தியை,
 'வெங்கோல் வேந்தன் தென்னாடும்ஈழமும் கொண்டதிறற் செங்கோற் சோழன் கோழிவேந்தன் செம்பியன் பொன்னணிந்த அடிகோல் வளையார் பாடியாடும் அணி
தில்லையம்பலம்'
என முதல் கண்டராதித்த சோழன் தன் தந்தை பராந்தக சோழனை தனது கோயிற் பதிகத்தில் போற்றி புகழ்ந்துள்ளான்.மேலூம்
'கோதிலாத் தேறல் குனிக்குந் திருமன்றங் காதலாற் பொன்வேய்ந்த காவலனும்'
என்று கவிச்சக்கரவர்த்தியாகிய ஒட்டக்கூத்தரும் விக்கிரம சோழன் உலாவில் பராந்தக சோழனை போற்றிப் புகழ்ந்திருத்தல் அறியற்பாலதொன்றாம்.
*பிற்கால சோழர் வரலாறு. தி.வை.சதாசிவப்பண்டாரத்தார்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...