Sunday, April 26, 2020

திரிபுவன வீரேச்சுரம் திருபுவனம்

பூமியின் நான்கு திசைகளையும் வெற்றி கொண்ட திரிபுவன வீரன்(மூன்றாம் குலோத்துங்க சோழன்) இவ்வூரையே இருப்பிடமாக கொண்டு அநேகப் பிரகார மாளிகைகள்,பற்பல வீதிகள் ஆகியவற்றுடன், சூரிய கதிரையே தடுக்கக் கூடியதாக வான வீதியை முட்டும் படி உயர்ந்த விமானத்துடன் பொன்மயமாக அழகு பெறத் திரிபுவன வீரேச்சுரம் என்னும் இத்திருக் கோயிலை எடுப்பித்தான்.

ஸ்ரீகண்டம்பு என்பவருடைய குமாரரும், தன்னுடைய குருவும் ஆன ஈசுரசிவர் என்னும் சோமேசுரரைக் கொண்டு இவ்வுலகத்துக்கே அம்மையப்பராக விளங்கும் பரமசிவன் பார்வதி ஆகிய இருவரையும் மிகச் சிறந்த முறையில் 'பாண்டியாரி'(மூன்றாம் குலோத்துங்க சோழன்)என்ற இவ்வரசன் பிரதிஷ்டை செய்தான்.
பிற்கால சோழர் வரலாறு தி.வை.சதாசிவப்பண்டாரத்தார்.
(இக்கோயிலில் உள்ள மூன்றாம் குலோத்துங்க சோழன் சிலையின் புகைப்படம் சதாசிவப்பண்டாரத்தார் எடுத்ததாகும்.)

Saturday, April 25, 2020

திருகாளத்தி சோழ திருமேனிகள்

திருகாளத்தி திருக்கோயிலில் உள்ள இத்திருமேனிகள் முதல் இராஜேந்திர சோழன் மகளும் கீழை சாளுக்கிய மன்னர் இராஜராஜநரேந்திரன் மனைவி அம்மாங்கதேவியும் இவள் மகன் முதல் குலோத்துங்க சோழனும் என கூறுகின்றனர்.

Tuesday, April 21, 2020

இராஜேந்திர சோழனை இளமையில் வளர்த்தவர்கள்

இராஜேந்திர சோழன் தன் தந்தையைப்  போல் சிவநெறியையே தனக்குரிய சமயமாக கொண்டவன். இவன் தன் வாழ்நாளில் சிவபெருமானிடத்தில் ஒப்பற்ற பக்தியுடையவனாய்த் திகழ்ந்தனன் என்பது இவன் தலைநகராகிய கங்கை கொண்ட சோழபுரத்தில் கற்றளியாக எடுப்பித்த ஈடும் ஏடுப்புமற்ற சிவாலயம்  ஒன்றினால் நன்கறியப்படும்.இவன், அவ்வாறு சிவபக்திச் செல்வமுடையவனாய் விளங்கியமைக்கு காரணம் இவன் கொள்ளுப்பாட்டி செம்பியன் மாதேவியும் இவனது அத்தை குந்தவை பிராட்டியாரும் இவனை இளமையில் வளர்த்து வந்தமையேயாகும்.ஒருவன் தன் இளமைப் பருவத்தில் எய்திய சிறந்த பயிற்சியும் பண்பும் அவன் வாழ்நாள் முழுவதும் நிலைபெற்றுப் பயன்படும் என்பது யாவரும் அறிந்த உண்மையேயாகும். இவ்வேந்தன் தன் ஆட்சியில் 8ஆம் ஆண்டாகிய கி.பி.1020-ல் செம்பியன் மாதேவியாரின் படிமம் ஒன்று செய்வித்து அதனை செம்பியன்மாதேவி எனும் ஊரில் உள்ள கோயிலில் எழுந்தருளவித்து அதன் நாள் வழிபாட்டிற்கு நிவந்தம் அளித்துள்ள செயல் ஒன்றே, இவன் சிவபக்திமிக்க அவ்வம்மையாரிடத்தில் எத்துணை அன்பும் மதிப்பும் வைத்திருந்தான் என்பதை இனிது புலப்படுத்துவதாகும்.இவனை போலவே இவன் தந்தை இராஜராஜ சோழனையும் வளத்தவர்கள் செம்பியன் மாதேவியும்,குந்தவையும் ஆகும்.
*பிற்கால சோழர் வரலாறு, தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

Saturday, April 18, 2020

திருவக்கரை வரதராஜ பெருமாள் கோயில்

திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோயில் உள்ளே இருக்கும் சிறிய கோயில் வரதராஜப் பெருமாள் கோயிலாகும்.கி.பி 3 ஆம் நூற்றாண்டில் கொச்செங்கண்ணனால் எடுக்கப்பட்ட செங்கல் கோயிலாகும்.இதை அதிராஜேந்திரன் 2ஆம் ஆண்டு ஆட்சியில் உடையார்  அதிராஜேந்திர தேவர்ற்கு ராஜேந்திர சோழவளநாட்டு பனையூர் நாட்டு பொய்யாக்கம் குடிப்பள்ளி குமாரி செந்தனான ஜயகொண்ட சோழ விழுப்பரைய நாடாழ்வன் என்பவன் இக்கோயிலை கற்றளியாக எடுத்துள்ளான். இங்கு முதல் குலோத்துங்க சோழன் ஆட்சியில் விளக்கெரிக்க நிலம் அளித்துள்ளனர்.அவனது மெய்க்கீர்த்தியும் உள்ளது.விக்கிரம சோழன் ஆட்சியில் நுந்தாவிளக்கும், சந்திவிளக்கெரிக்க 12 ஆடுகளை குலக்கிழவன் ஆட்டரையன் திருநாடுடையவன் என்பவன் கொடுத்துள்ளான்.கல்வெட்டுகளில் இக்கோயில் பெருமாள் திருவக்கரை ஆழ்வார் என அழைக்கபடுகிறார். இவையனைத்தும் தென்னிந்திய கல்வெட்டு தொகுதிலிருந்து நானே தொகுத்து எழுதியுள்ளேன்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

செம்பியன் மாதேவி இறுதியாக எடுத்த திருவக்கரை கோயில்

திருவக்கரை சந்திரமெளலீசுரர் கோயில்
முதல் ஆதித்த சோழன் காலத்தில் எடுக்கப்பட்ட கோயிலாகும்.
இராஜராஜ சோழன் 16 ஆம் ஆட்சியில் செம்பியன்மாதேவியின் வாழ்நாளின் இறுதியாண்டுடில் கி.பி.1001 இல் அவரால் எடுக்கப்பட்ட சந்திரமவுலீசுவரர் திருக்கோயிலாகும்.
"கோராஜராஜகேஸரி வந்மற்கு யாண்டு யக்ஷ ஆவது ஸ்ரீகண்டராதித்த தெவர் நம்பிராட்டியார் ஸ்ரீ உத்தம சோழரைத் திருவயிறு வாய்த்த உடைய பிராட்டியார் செம்பியன் மாதெவியார் எடுப்பித்தளுளின ஸ்ரீ திருவக்கரை கற்றளி சிவலொகம்" என கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளது. இந்த செம்பியன் மாதேவியார் வாழ்நாள் முழுவதும் சிவதொண்டு செய்து இறுதியாக கைலாயம் சென்று விட்டார்.அதனாலோ இக்கோயிக்கு சிவலோகம் பெயரிட்டிருப்பார் என கருத வேண்டியுள்ளது.இக்கோயிலுக்கு பல நிவந்தம் அளித்துள்ளார்.இங்கு ஆதித்த சோழன், இராஜராஜ சோழன்,இராஜேந்திர சோழன்,முதல் குலோத்துங்க சோழன்,விக்கிர சோழன்,இரண்டாம் இராஜதிராஜன்,மூன்றாம் குலோத்துங்க சோழன், கோப்பெருஞ்சிங்கன்,மாறவர்மன் விக்கிரம பாண்டியன்,சாளுவ நரசிங்க தேவன்,கிருஷ்ணதேவ ராயர் ஆகியோர் காலங்களில் வெட்டப்பட்ட கல்வெட்டுகள் உள்ளன.அவை விளக்குகள் தானம்,விளக்கெரிக்க பசுக்கள்,சாவாமூவா பேராடுகள் மற்றும் நிலங்களை தானம் வழங்கியதை கூறுகிறது.இரண்டாம் இராஜராதிராஜன் ஆட்சியில் இவன் படைத்யலைவன் அம்மை அப்பன் பாண்டியநாடு கொண்ட கண்டர் சூரியன் சம்புவராயன் தன் பெயரில் கண்டர் சூரியன் எனும் கோபுரம் எடுப்பித்தான்.மேலும் இவன் மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சிலும் படைத்தலைவாக இருந்து கண்டர் சூரியன் திருமண்டபம் என தன் பெயரில் ஒரு ஆயிரங்கால் மண்டபத்தை எடுபித்தான்.பெரிய குத்துவிளக்கு ஒன்றை இக்கோயிலுக்கு அளித்துள்ளான்.மாறவர்மன் விக்கிரம பாண்டியன் மனைவி உலகமுழுதுடையார் ஒரு மண்டபம் எடுத்துள்ளார்."ஸ்வஸ்ரீ பெருமான் விக்கிரம பாண்டிய தெவர் நம்பிராட்டியார் உலகமுழுதுடையார் செய்வித்த மண்டபம்" இக்கோயிலில் கங்கை கொண்ட பெரியான் வன்னிகுமாரன் என்பவன் ஸ்ரீபலி தேவர் எனும் திருமேனியை எழுந்தருளவித்துள்ளான்.ஆடவல்லான் பெரியான் என்பன் ஒரு கெண்டி அளித்துள்ளான்.15 ஆம் நூற்றாண்டில் செஞ்சொற் தெவரசயன் கம்பக்களிற்றண்ணலிதூர் செம்மந்தை காங்கெயனன் என்பவன் கோபுரமும் மண்டபமும் எடுத்துள்ளான்.மேலும் கச்சிச் சின்னன் துணைவளரசன் குமரானற் செவ்வந்தனன் மண்டமும் கோபுரமும் எடுத்துள்ளான். கல்வெட்டுகளில் இறைவன் திருவக்கரை ஆளுடையார் என அழைக்கப்படுகிறார். இறைவன்:சந்திரமவுலீசுவரர். இறைவி:வடிவாம்பிகை,வக்கிரக்காளி அம்மன் சன்னதியும் உள்ளது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலம்.
திருவக்கரை வரதராஜ பெருமாள் கோயில்.
திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோயில் உள்ளே இருக்கும் சிறிய கோயில் வரதராஜப் பெருமாள் கோயிலாகும்.கி.பி 3 ஆம் நூற்றாண்டில் கொச்செங்கண்ணனால் எடுக்கப்பட்ட செங்கல் கோயிலாகும்.இதை அதிராஜேந்திரன் 2ஆம் ஆண்டு ஆட்சியில் உடையார்  அதிராஜேந்திர தேவர்ற்கு ராஜேந்திர சோழவளநாட்டு பனையூர் நாட்டு பொய்யாக்கம் குடிப்பள்ளி குமாரி செந்தனான ஜயகொண்ட சோழ விழுப்பரைய நாடாழ்வன் என்பவன் இக்கோயிலை கற்றளியாக எடுத்துள்ளான். இங்கு முதல் குலோத்துங்க சோழன் ஆட்சியில் விளக்கெரிக்க நிலம் அளித்துள்ளனர்.அவனது மெய்க்கீர்த்தியும் உள்ளது.விக்கிரம சோழன் ஆட்சியில் நுந்தாவிளக்கும், சந்திவிளக்கெரிக்க 12 ஆடுகளை குலக்கிழவன் ஆட்டரையன் திருநாடுடையவன் என்பவன் கொடுத்துள்ளான்.கல்வெட்டுகளில் இக்கோயில் பெருமாள் திருவக்கரை ஆழ்வார் என அழைக்கபடுகிறார். இவையனைத்தும் தென்னிந்திய கல்வெட்டு தொகுதிலிருந்து நானே தொகுத்து எழுதியுள்ளேன்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

Saturday, April 11, 2020

முன்னோர்களின் கல்வெட்டுகளை பாதுகாத்தல் திருமழப்பாடி கோயில்

திருமழபாடி சேரர்களின் கிளைப்பிரிவினர் வாழும் பகுதியாகும். அவர்கள் மழவர்கள் என அழைக்கப்படுகின்றனர்.இக்கோயில் ஆதித்தன் சோழன் காலத்தில் எடுக்கப்பட்டது.இக்கோயில் விமானத்தை புதுப்பித்து பழைய கல்வெட்டுகளை படியெடுத்து மீண்டும் வெட்டும்படி இராஜராஜ சோழன் 28ஆம் ஆட்சி ஆண்டில் ஆணையிடுகிறான்.அதை இராஜேந்திர சோழன் புதுப்பித்து 14 ஆம் ஆண்டு ஆட்சியில் அதை கல்லில் வெட்ட ஆணையிடுகிறான். "திருமழுவாடி உடையார் ஸ்ரீராசராச தேவர் அருளிச் செய்த திருக்கற்றளி எடுக்க ஸ்ரீவிமானம் வாங்கி(இடிக்க) ஸ்ரீவிமானத்துள்ள கல்வெட்டுப்படி பொத்தகத்தில் சேர்ப்பிக்க"
"ஆக இவ்வனைவர் கண்காணியாலும் இவ்வனைவர் கணக்கினாலும் கல்வெட்டுவித்தபடி முன்பு கல்வெட்டுச் சேர்ந்த பொத்தகப்படி"
இராஜேந்திர சோழன் புதுப்பித்து வெட்டிய முதல் கல்வெட்டு "முன்பு திருமழப்பாடி உடையார் கோயிலில் ஸ்ரீவிமானம் வாங்கி(இடித்து)ச் செய்கிறபோது ஸ்ரீவிமானத்தில் இருந்த கல்வெட்டுக்க்களை கற்படி மாற்றுச் செய்த புத்தகப்படியே திரும்பவும் கல்வெட்டுக"
முன்னோர்களின் கல்வெட்டுகளை பாதுகாக்க அன்றே அவற்றை நடைமுறை படித்தினர்.இக்கோயில் கல்வெட்டுகளை ஓலை சுவடியில் படியெடுத்து அவற்றை கோயில் புதுப்பித்த பின்பு மீண்டும் கல்லில் வெட்டினர். செம்பியன் மாதேவியும் இப்பணியை முன்னரே செய்துள்ளார்  திருகோடிகா கோயில்.இந்த தந்தை மகன் ஆணையிட்டதை இவர்களின் படைத்தலைவர்கான கிருஷ்ணன் ராமன் மும்முடிச்சோழன் பிரம்மராயனும் இவன் மகன் மாராயன் அருண்மொழியான உத்தமசோழ பிரம்மராயனும் திருப்பணி செய்து இந்த தந்தை மகன் நிறைவேற்றினர்.மேலும் சிறப்பு செய்திகள் இராஜேந்திர சோழன் சக்கரவர்த்தி பட்டம் பெற்றிருந்தான். இவன் பிறந்த திருவாதிரை நட்சத்திரம் மாதம்தோறும் விழா கொண்டாடினர். இவன் மனைவியருள்  வானவன்மாதேவி என்பவர்.இவன் மகள் பெயர் அருமொழி நங்கையாரன பிரான்.இவன் முதல் மகன் இராஜாதிராஜ சோழன் தராதலம் படைத்த ஜெயகொண்ட சோழனென்றும்,மதியெழு கோவிராஜ கேசரி வர்மரான உடையார் ஸ்ரீ ராஜாதி ராஜ தேவர் எனவும் குறிக்கப்பட்டுள்ளது. சோழர்களின் குல தெய்வம் நடராஜ பெருமானே என்று விக்கிர சோழன் மெய்க்கீர்த்தியில் இங்கு குறிக்கப்பட்டுள்ளது. இவ்வூரில் செம்பியன்மாதேவி பேரேரி உள்ளது.திருஞானசம்பந்தர்,அப்பர்,சுந்தரரால் பாடல் பெற்ற தலம்.
இறைவன்:வைத்திய நாதர்.
இறைவி:சுந்தராம்பிகை.  சுந்தரர், திரு வாலம்பொழிலில் இருந்த போது .மழபாடி இறைவன், அவரது கனவில் தோன்றி, `மழபாடிக்கு வர மறந்தனையோ`` என்று கூற, உடனே சுந்தரர் ``பொன்னார் மேனியனே`` என்று தொடங்கும் பதிகம் பாடி வழிபட்ட கோயில் இது. இவரது பாடல் படியே இக்கோயில் பொன்னர் திருமேனியை செப்புத்தராவால் எழுந்தருளுவித்தவன் உடையார் இராஜேந்திர சோழதேவர் அணுக்கியார் ஐயாறன்செம்பொன் நங்கைக் கூத்தன் உத்தம சீலியார் மகனார் சிறுதனப் பெருந்தரம் சேனாதிபதி அரையான் கடாரங் கொண்ட சோழன் இராஜராஜ அணிமுரி நாடாழ்வான் ஆவான்.இவன் இரண்டாம் இராஜேந்திரன் படைத்தலைவன் ஆவான். இன்னும் பல மன்னர்கள் மற்றும் கோயிலில் திருமேனிகளை எழுந்தருள வித்தவர்கள் என பல கல்வெட்டுகள் உள்ளன.இரா.விக்ரமன்,சிதம்பரம்.

Thursday, April 9, 2020

கண்ணப்பர் திருமேனி திருவெண்காடு

இராஜராஜ சோழன் காலத்தில் திருவெண்காடு கோயிலில் கி.பி.975 ஆம் ஆண்டு கண்ணப்பர் திருமேனி அளிக்கப்பட்டது.வலக் கண்ணை பிடுங்கி இடக் கையில் வைத்து ஒரு கண்ணுடன் நிற்கும் திண்ணனின் கம்பீரமான உருவம்.
"இதற்கினி என்கண் அம்பால் இடந்தபின் எந்தையார்கண் அதற்கிது மருந்தாய்ப் புண்ணீர் நிற்கவும் அடுக்கும்"என்றும் மதர்த்தெழும் உள்ளத்தோடு மகழ்ந்து முன் இருந்து தங்கண் முதற்சர மடுத்து வாங்கி முதல்வரதங கண்ணில் அப்ப நின்ற செங்குருதி கண்டார்" இரா.விக்ரமன், சிதம்பரம்

Saturday, April 4, 2020

மூவேந்தர் போற்றிய கண்ணகி வழிபாடு

இமயத்திலிருந்து கல் எடுத்து சேரன் செங்குட்டுவன் வஞ்சி நெடுவேள் குன்றத்திலும் கொடுங்கலூரிலும் கண்ணகிக்கு கோயில் கட்டினான்.பாண்டியன் வெற்றிவேற் செழியன்  கண்ணகியின் சினம் தனிய கொற்கையில் கண்ணகிக்கு  கோயில் கட்டி பெருவிழா நடத்தினான்.சோழ நாட்டில் பிறந்த கண்ணகிக்கு சேரன் செங்குட்டுவனின் மாமன் நெடுங்கிள்ளி  சோழன் மகனான பெருநற்கிள்ளி சோழன் உறையூரில் கண்ணகிக்கு கோயில் கட்டினான். அவை தற்போது உறையூரில் உள்ள வெக்காளி அம்மன் கோயிலே என கூறுகின்றனர். கண்ணகி கோயில்கள் எல்லாம் காளி கோயிலாகவே மாற்றம் அடைந்தது.   அந்த கண்ணகிக்கும் உலக உயிர்கள் அனைவருக்கும் தாயானவள் தேவி பார்வதி அவளின் அவதாரமான துர்கை,காளி,பிடாரி போன்ற தெய்வங்களுக்கு சேர,சோழ, பாண்டியர்,பல்லவர் எடுத்த திருக்கோயில்கள் பழமையும் பெருமையும் சிறப்பும் வாய்ந்தவையாகும்.

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...