Saturday, August 31, 2019

உடையார் குடி அனந்தீசுவரன் கோயில்

பராந்தக சோழனால் எடுக்கப்பட்ட கோயில்.கல்வெட்டுகளில் வீரநாரயண சதுர்வேதி மங்கலத்து அனந்தீசுவர உடையார் என அழைக்கப்படுகிறார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருக்கோயில். கண்டராதித்த சோழன் செம்பியன் மாதேவிக்கு இக்கோயிலில் தான் திருமணம் நடைப்பெற்றதாம். இராஜராஜ சோழன் தன் அண்ணன் ஆதித்த கரிகாலனை கொன்றவர்களுக்கு தண்டனை அளிக்கப்பட்ட கல்வெட்டு உள்ளது. முதல் இராஜேந்திர சோழன் இந்த அனந்தீசுவர பெருமானை 'நம் மூல தெய்வம்' என குறித்துள்ளான். அதாவது இந்த அனந்தீசுவர பெருமானை தம் குல தெய்வமாக வழிபட்டுள்ளான். பெரிய குந்தவையார் சூரிய தேவன் செப்பு திருமேனி செய்ய பொன் அளித்துள்ளார்.இராஜேந்திர சோழன் மனைவி திரிபுவன மாதேவி சந்திர சேகரரும் அவர் பிராட்டியார் திருமேனியை அளித்துள்ளார்.சோழ மன்னர்கள் நிவந்தம் அளித்த கல்வெட்டுகள். செம்பியன் மாதேவி அளித்த நிவந்த கல்வெட்டும் அதில் கண்டாரதித்த சோழன் 'மேற்கெழுந்தருளிய தேவர்' என குறிக்கப்படுகிறார்.உத்தம சோழன் கல்வெட்டும்.அரிஞ்சய சோழன் மனைவிகள் வீமன் குந்தவை,ஆதித்த கோதைப்பிராட்டி நிவந்தம் அளித்த கல்வெட்டும். இரண்டாம் ஆதித்த கரிகால சோழன் கால கல்வெட்டும் அதில் அரையன் ஜயவிடங்கன் என்பவன் மூலத்தானம் தெற்கே கூத்த பெருமான் சன்னதியும்,கணபதி சன்னதியும் கட்டுவித்த செய்தியை கூறுகிறது. முதல் பராந்தக சோழனால் 'நம் மகனார்' என்று பராட்டப்பட்ட தென்னவன் விழுப்பரையனால் கட்டப்பட்ட மண்டபத்தில் ஊர் சபையினர் கூடினார்களாம்.உத்தம சோழன் காலத்தில் பழுவேட்டரையர் கண்டனர் தம்பிலி தர்மன் விளகெரிக்க  நிவந்தம் அளித்துள்ளார். பழுவேட்டரையன் கண்டன் சுந்தர சோழன் என்பான் தன் தம்பி கண்டன் சத்ரு பயங்கரன் ஆன்மா சாந்தி அடைய விளக்கெரிக்க நிலம் அளித்துள்ளான்.
இரா.விக்ரமன், சிதம்பரம்.
சான்றுகள்:S.I.I.NO.529-627
முற்கால சோழர் கலையும் சிற்பமும் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம்.

Monday, August 19, 2019

திருக்குருக்காவூர் வெள்ளடை நாதர் கோயில்.

திருஞானசம்பந்தர் சமணர்களை கழுவேற்ற காரணமாக இருந்ததால் தன் பாவங்களை போக்க காசி சென்று கங்கையில் மூழ்க அனுமதி தர சீர்காழி பெருமானை வேண்ட சிவபெருமான் திருக்குருக்காவூர் செல் அங்கு உள்ள கிணற்றில் கங்கையை வர செய்கிறேன் அதில் உன் பாவங்களை போக்கிக்கொள் என்றார்.அதன்படியே இங்கு கிணற்றில் கங்கை பொங்கியது அதில் குளித்து பாவங்களை போக்கினார்.இன்றும் தை அமாவாசை அன்று மட்டும் அந்த கிணறு திறந்து அனைவரும் நீராடுகின்றனர்.இந்த கிணற்று நீர் அன்று பால் நிறமாக மாறுகிறதாம்.சுந்தரர் ஒரு நாள் தன் அடியார்களுடன் இங்கு வரும்போது அனைவரும் பசி தாகத்தால் வாட சிவபெருமான் அந்தணர் உருவில் வந்து தண்ணீர் பந்தல் அமைத்து அனைவருக்கும் நீர் அன்னம் வழங்கினார்.பின்பு அனைவரும் உறங்கிய பின்னர் பந்தலோடு மறைந்தார்.கண் விழித்த சுந்தரர் இறைவன் வந்து கருணை காட்டியதை அறிந்து பதிகம் பாடி போற்றினார்.கல்வெட்டுகளில் இறைவன் குருக்காவூர் வெள்ளடை மகாதேவர்,வெள்ளடை ஆண்டார், வெள்ளடையப்பர் என அழைக்கப்படுகிறார். இறைவி:காவியங்கண்ணி
முதல் இராஜேந்திர சோழன், முதற்குலோத்துங்கன், விக்கிரம சோழன், பரகேசரி வர்மராகிய குலோத்துங்க சோழன் மதுரையும் ஈழமும் கொண்டருளின இராச கேசரிவர்மனாகிய திரிபுவன சக்கரவர்த்தி இராஜாதிராஜ தேவன் இவர்களால் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இங்குள்ள மன்னர் சிலை விக்கிரம சோழன் அல்லது மூன்றாம் குலோத்துங்க சோழனாக இருக்கலாம். இங்குள்ள துர்க்கையின் இருபுறமும் இரண்டு வீரர்கள் தங்களை பலியிட்டு கொள்கின்றனர். பெருமாளுக்கு தனி சன்னதி உள்ளது
இராஜேந்திர.விக்ரமன்,சிதம்பரம்.






Sunday, August 11, 2019

மாணிக்க வாசகர் அவதார இல்லம் (திருக்கோயில்).

திருவாதவூரில் மணிக்கவாசகர் பிறந்த வீடு தான் கோயிலாக உள்ளது. திருவாதவூர் சிவன் கோயிலிலும் மாணிக்கவாசகருக்கு தனி சன்னதி உள்ளது.திருப்பெருந்துறை ஆத்மநாதர் கோயிலூம் சிதம்பரம் ஆத்மநாதர் கோயிலூம் மாணிக்கவாசகர் கட்டியதாக கூறுகின்றனர். பாண்டிய நாட்டில் திருவாதவூரில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாய் பிறந்தார் வாதவூரார்.வரகுண பாண்டியனிடம் அமைச்சராக பதவி வகித்து தென்னவன் பிரம்ம ராயன் எனும் பட்டம் பெற்றார்.பாண்டிய மன்னன் சோழ நாட்டிற்கு குதிரைகள் வாங்க மாணிக்க வாசகரை அனுப்பினார் அவர் போகும் வழியில் திருப்பெருந்துறையில் தங்கினார். அங்கு சிவபெருமான் குரு வடிவம் கொண்டு குருந்த மரத்தடியில் மாணிக்கவாசகருக்கு ஞான உபதேசம் செய்தார்.அவர் முழு சிவனடியாராக மாறினார். மாணிக்கவாகரை அழைத்து வர மன்னனிடம் இருந்து ஓலை வந்தது. அதை குரு வடிவம் கொண்ட இறைவன் படித்து ஆவணி மூலநாளில் குதிரைகள் வரும் என செய்தி அனுப்பினார்.ஆனால் குதிரைகள் வர வில்லை மன்னன் மாணிக்க வாசகருக்கு தொல்லைகள் கொடுத்தான்.இதை அறிந்த இறைவன் சிவகணங்களை வீரர்களாகவும் நரிகளை குதிரைகாளாக மாற்றி அதற்கு தானே தலைவனாக சென்று மன்னனிடம் கொடுத்து பரிசு வாங்கி சென்றார்.மன்னன் மாணிக்க வாசகரை பாராட்டினான்.அன்று இரவு குதிரைகள் எல்லாம் நரிகளாக மாறி அங்கிருந்த மற்ற குதிரைகளை கடித்து குதறி சென்றன. இதை அறிந்த மன்னன் மாணிக்கவாசகரை வைகையாற்றில் சுடு மணலில் நிறுத்தினான். இறைவன் கங்கையை வைகையில் பெருக்கெடுத்து வர செய்தார்.வெள்ளம் ஊருக்கு வராமல்் இருக்க வீட்டிற்கு ஒரு இளைஞன் வந்து கரையை அடைக்க மன்னன் ஆணையிட்டான்.அங்கு பிட்டு விக்கும் கிழவி தன் வீட்டில் யாரும் இல்லையே என கவலை கொள்ள அங்கு இறைவன் ஒரு இளைஞன் வடிவில் வந்து கிழவியிடம் நான் கரையை அடைக்கட்டுமா கேட்டார் கிழவி சரி அதற்கு கூலியாக பிட்டு மட்டுமே தருவேன் என்றாள்.பிட்டையெல்லாம் வாங்கி சாப்பிட்டு ஒரு மரத்தடியில் தூங்கினான் இறைவன்.அங்கு கரையை அனைவரும் அடைத்து கிழவியின் பக்கம் அடைக்காமல் ஓட்டைலயில் தண்ணீர் வந்தது இதை கண்ட மன்னன் மரத்தடியில் தூங்கிய இறைவனை பிரம்பால் அடித்தான். எழுந்த இறைவன் ஒரு கூடை மண்ணை உடைப்பில் கொட்ட உடனே அடைத்து கொண்டது.இறைவன் மறைந்தான்.ஆனால் மன்னன் அடித்த பிரம்படி அனைத்து உயிர்கள் மீதும் பட்டது.வானத்திலிருந்து இறைவன் அசரீரியாக மன்னா நான் வாதவூராகாக தான் திருவிளையாடல் புரிந்தோம் என்றான்.மன்னன் பணிந்து வணங்கி மாணிக்கவாசகரை முன்புபோல் அமைச்சர் பதவிக்கு அழைத்தான்.அவற்றை மறுத்து பல சிவத்தலங்களுக்கு சென்று இறுதியாக சிதம்பரம் வந்தார் அங்கு ஒரு இலங்கை மன்னனின் ஊமை மகளைப் பேச வைத்து பெளத்தர்களை வாதில் வென்றார்.சிவபெருமான் ஒரு வேதியர் வடிவில் வந்து மாணிக்கவாசகரிடம் சிற்றம்பலமுடையார் மீது ஒரு கோவை பிரபந்தம் பாட வேண்டினார்.அவர் திருக்கோவையும்,திருவாசகம் பாட அதை இறைவன் எழுதி அம்பலவாணன் என கையொப்பமிட்டு சிற்றம்பலத்தில் வைத்து மறைந்தார்.மாணிக்க வாசகரிடம் திருவாசகத்தின் பொருள் என்ன என்று தில்லை வாழ் அந்தணரும் பிறரும் கேட்டனர் அதற்கு அனைவரையும் சிற்றம்பலத்திற்கு அழைத்து வந்து திருவாசகத்திற்கு பொருள் நடராஜ பெருமானை காண்பித்து அங்கு மறைந்தார்.இதை மாணிக்க வாசகர் வரலாற்றில் விரிவாக காணலாம்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.


Sunday, August 4, 2019

இராஜராஜ சோழன் கோழிப்போர்

ராஜராஜசோழன் கோழிப்போர் சண்டையில்  வெற்றி பெறவும் ஊத்தை அட்டாமல் இருக்கவும் (உடலில் ஊனம் ஏற்படாமல் இருக்க) அவனது அதிகாரிகளும் பிறரும் தஞ்சை பெரிய கோயிலில் அளித்த நிபந்தங்கள்.
"உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர் குடுத்த கால்மாட்டிலுங் குடுத்தார் குடுத்த கால்மாட்டிலுங் காசும் அக்கமுங் குடுத்து முதலான கால் மாட்டிலுங்ந் திருவிளக்குக்கு அடுத்தபடி கல்லில் வெட்டின"
"பெருந்தரம் மாராயன் ராஜராஜந் தன்னை உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர் கோழிப்போரில் ஊத்தை அட்டாமல் என்று கடவ திருவிளக்குக்கு வைத்த காசில் குடுத்த காசு எட்டினால் காசு ஒன்றினுக்கு ஆடு மூன்றாக ஆடு இருபத்துநாலும்."
"வில்லவன் மூவேந்தவேளான் தன்னை உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர் கோழிப்போரில் ஊத்தை அட்டாமல் என்று கடவ திருவிளக்குக்கு வைத்தகாசில்"
"சேநாபதி குரவன் உலகளந்தனான ராஜராஜமஹாராஜந் தன்னை உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர் கோழிப்போரில் ஊத்தை அட்டாமல் என்று கடவ திருவிளக்குக்கு தந்த பசு"
இராஜராஜ சோழன் மேலை சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயனை வென்று கைப்பற்றி வந்த பொருளை கொண்டு பொற்பூக்கள் செய்து இராசராசேச்சர பரம சுவாமிக்கு ஸ்ரீ பாத புஷ்பமாக இட்டு வழிப்பட்டுள்ளான்.
"ஸத்யாச்ரயனை எறிந்து எழுந்தருளி ஸ்ரீ பாத புஷ்பமாக அட்டித் திருவடிதொழுதன: திரு பொற்பூ ஒன்று பொன் ஒன்பதின் கழஞ்சேய் முக்காலே நாலு மஞ்சாடியுங் குன்றியாக பன்னிரண்டு னாற் பொன் நூற்று ஒரு பத்து ஒன்பதின் கழஞ்சரையே நாலு மஞ்சாடி"
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...