Monday, February 28, 2022

சிவராத்திரி கல்வெட்டு

எம்மண்டலமுங் கொண்டருளிய முதல் மாறவர்மன் குலசேகர பாண்டியன் 40 ஆம் ஆண்டு ஆட்சியில் 1307 இல் கோட்டை கருங்குளம் என்ற ஊரில் உள்ள இராசசிம்மேசுவரமுடையார் திருக்கோயிலில் சங்கராந்தி, சிவராத்திரி,சூரிய சந்திர கிரகண நாட்களில் சிவதர்மம் படிப்பதற்கு கருங்குளமாகிய கரிகாலசோழ நல்லூரான விசயநாராயணச் சதுர்வேதிமங்கலத்து திருவேங்கடநாராயண பட்டர்க்கு இறையிலியாக நிலம் அளித்துள்ளான். இரா.விக்ரமன்,சிதம்பரம்

Sunday, February 20, 2022

விக்கிரம பாண்டியன் திருவீதி

கி.பி.13 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த விக்ரமபாண்டியன் அண்ணாமலையார் மீது பக்தி கொண்டு கிரிவலைபாதையை திருப்பணி செய்து அங்கு "ஸ்வஸ்திஸ்ரீ விக்ரமபாண்டியன் திருவீதி ஆறாம் வகுப்பு" வீதியின் நீளத்தை பல பகுதிகளாக பிரித்து வீதியின் பெயரையும் வகுப்பின் பெயரையும் குறித்து மைல்கல் போல சாலையின் இருபுறமும் நட்டுள்ளான்.அதில் மீன் சின்னத்தை பொறித்துள்ளான்.ஆறாம் வகுப்பு, நாலாம் வகுப்பு என இரண்டு கல்வெட்டு மைல்கற்களை தொல்லியல் துறையினர் கண்டறிந்தனர். விக்ரமன் ராமன்.

Tuesday, February 15, 2022

எதிரிலி சோழன் சிவபாதசேகரன் சித்தத்துணை பெருமாள் விழா

இரண்டாம் குலோத்துங்க சோழன் தில்லை அம்பலவாணன் கோயிலில் எதிரிலிசோழன் சிவப்பாதசேகரன் சித்தத்துணை பெருமாள் விழா என்ற விழாவை ஏற்பாடு செய்துள்ளான். தன்குல முன்னோன இராஜராஜ சோழன் முதல் சோழர்க்கு நடராஜர் பெருமான் சித்தத்துணையாக இருந்து வந்ததாலே இவ்விழாவினை ஏற்பாடு செய்துள்ளான்.மேலும் அம்பலவாணர் குலோத்துங்க சோழன் திருத்தோப்புக்கு எழுந்தருளும் எதிரிலி சோழன் சிவபாதசேகரன் சித்தத்துணை பெருமாள் விழாவில் எதிரிலிசோழன் சிவபாதசேகரன் சித்தத்துணை பெருமாள் நந்தவனத்திற்கு எழுந்தருளி திருப்பாலிகை வலஞ்செய்து எழுதருளுளினார்.இராஜராஜ சோழன் ஆடவல்லான் மீது அதிக பக்தியும் அன்பும் கொண்டவன் தஞ்சை பெரிய கோவிலில் ஆடவல்லான் திருமேனி அளித்தும் அங்கு ஓவியத்தில் தான் ஆடவல்லானை வணங்குவது போல வரைந்துள்ளான் மேலும் மரக்கால்,நிறைகல்,துலாக்கோல் ஆகியவற்றிற்கு ஆடவல்லான் என பெயரிட்டுள்ளான். இரா.விக்ரமன்,சிதம்பரம்

Monday, February 7, 2022

நரசிம்ம வர்ம பல்லவன் தேவியை பிடித்த பிசாசு கல்வெட்டு

பிசாசு கல்வெட்டு இரண்டாம் நரசிம்ம பல்லவனின் மனைவியான, லோகமாதேவி, பிரம்ம ராட்சஷனால்(கெட்ட பிராமண பிசாசு) பிடிக்கப்பட்டாள்.பாடங்காளன பள்ளியை சேர்ந்த கெளவுதமன் எனும் ஆசிவக பிரிவை சார்ந்த சமணத்துறவி அந்த பிசாசை விரட்டிவிடுகிறான் அதற்கு அரசன் மகிழம்பள்ளி என்ற ஊரை தானமாக அந்த சமணபள்ளிக்கு அளிக்கின்றான்.இந்த கல்வெட்டில் நரசிங்க போத்தரையன் ஆண்டு 18 இவன் முதல் நரசிம்ம வர்மன் அல்லது இரண்டாம் நரசிம்ம வர்மனா என்ற கேள்விக்கு காஞ்சி கைலாசநாதர் கோயிலில் சிறிய சிவன்கோயில்களை இரண்டாம் நரசிம்ம வர்மன் மனைவி இரங்கபாதை என்பவள் பாதி கோயில்களும் மீதம் உள்ள கோயிலை லோகமாதேவி எனும் அவன் மற்றொரு மனைவியும் எடுத்துள்ளனர் என கூறுகின்றனர்.இங்கு நான் கூறுவது என்னவென்றால் லோகமாதேவி எனும் பெயர் முதல் நரசிம்ம வர்மன் மனைவியின் பெயராக ஏன் இருந்திருக்க கூடாது.அது பல்லவ அரசிகளின் போது பெயராக இருந்திருக்க கூடாதா?மகேந்திர வர்மன் காலத்தில் அவன் சைவனாக மாறி அனைத்து சமண பள்ளிகளையுமா இடித்து விட்டான் இல்லை .நரசிம்ம வர்மன் காலத்திலும் சமணபள்ளிகளை அவன் சமநோக்குடையவனாக இருந்து அதை ஆதரித்து வந்திருப்பான். காஞ்சி கைலாச நாதர் கோயில் கட்டிய இரண்டாம் நரசிம்ம வர்மன் சிறந்த சிவபக்தன் ருத்ராட்ச சிவலிங்கத்தை தலையில் சூடியவன் வானில் அசரீரி கேட்டவன்.அப்படி அவன் மனைவிக்கு பிசாசு பிடிக்க வாய்ப்பில்லை அப்படி பிடித்தாலும் அது அவன் உருவத்தை பார்த்தே ஓடி போய் இருக்கும்.அவன் உருவத்தில் சிவபெருமானை ஒத்தவன்.இல்லையென்றால் சிவனடியார்களே அதை விரட்டியிருப்பார்கள்.ஒருவேளை முதல் நரசிம்ம வர்மன் மனைவியாக லோகமாதேவி இருந்து அவளுக்கு சித்தபிரமை பிடித்து அதை அந்த சமணதுறவி தெளிய வைத்து இருக்கலாம்.சமணகள் மாந்தீரகம்,மருத்துவத்தில் சிறந்தவர்கள்.எனது கருத்து இந்த கல்வெட்டில் குறிப்பிடபடும் அரசன் முதல் நரசிம்ம வர்மனாக இருக்கலாம். இரா.விக்ரமன்,சிதம்பரம். கல்வெட்டு தகவல்:கல்வெட்டு அறிஞர் தி.நா.சுப்பிரமணியம்.

Friday, February 4, 2022

மிழலை நாட்டு கண்டன் மாதவன் நீடுர் திருப்பணி

முதல் குலோத்துங்க சோழன் 38,46 ஆண்டு ஆட்சியில் மிழலை நாட்டு கண்டன் மாதவன் எனும் சிற்றரசன் நீடுர் கோயிலை கற்றளியாக்கி விமானம் எடுத்துள்ளான். தில்லையிலும் புராணவிரிசை மண்டபத்தையும் சொன்னா வாறறிவார் கோயிலிலும் திருப்பணி செய்துள்ளான். காரிகை குளத்தூர் மன்னவன்,மிழலை நாட்டு வேள்,தொண்டை காவலன் என கூறப்பட்ட இவன் அமிரசாகர முனிவரை கொண்டுயாப்பருங்கலக் காரிகை நூலை இயற்றிய மன்னன் பரம்பரையில் வந்தவன் மிழலை நாட்டு கண்டன் மாதவன் ஆவான்.நீடுர் கோயில் பாடல் கல்வெட்டு. 1."எண்டிசை உலகை ஒருகுடை நிழற்கீழ் இருத்திய குலோத்துங்க சோழற்கு யாண்டு முப்பதெட்டினில் சோணாட்டு இசைவளர் இந்தளூர் நாட்டுள் உண்டை நீடிய நீடுர் உமையோடு உலாவின சிவபெருமானுக்கு உவந்து வெண்கயிலை மலையெனச் சிலையால் உத்தம விமானங் கமைத்தான் தண்டமிழ் அமிதச சாகர முனியை சயகொண்ட சோழ மண்டலத்து தண் சிறுகுன்ற நாட்டகத்து இருத்திச் சந்தநூற் காரிகை அவனால் கண்டவன் மருமான் காரிகை குளத்தூர்க் காவலன் நிலாவினான் எவர்க்கும் கருணையும் நீதியும் காட்டிய மிழலை நாட்டுவேள் கண்டன் மாதவனே" 2.ஆரிய உலகம் அனைத்தையுங் குடைகீழ் ஆக்கிய குலோத்துங்க சோழற்கு ஆண்டொரு நற்பத் தாறிடைத் தில்லை அம்பலத்தே வடகீழ்ப் பால் போரியல் மதத்துச் சொன்னா றறிவார் கோயிலும் புராணநூல் விரிக்கும் புரசைமா ளிகையும் வரிசையால் விளங்கப் பொருப்பினான் விருப்புறச் செய்தோன் நேரியற்கு ஆண்டோர் அஞ்சுடன் மூன்றில் நிகரிலாக் கற்றளிநீடுர் நிலாவினாற்கு அமைத்த நிலாவினான் அமுத சாகரன் நெடுந்தமிழ் தொகுத்த காரிகை குளத்தூர் மன்னன் தொண்டை காவலன் சிறுகுன்ற நாட்டுக் கற்பக மிழலை நாட்டு வேளாண்மை கொண்டவன் கண்டன் மாதவனே" இரா.விக்ரமன்,சிதம்பரம்.

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...