Tuesday, May 28, 2019

திருவதிகை காமக்கோட்டம் எனும் பெரியநாயகி அம்மன் கோயில்

இக்கோயிலைக் கட்டியவர் முதற் குலோத்துங்சோழன் விக்கிரம சோழன் இவர்களின் படைத் தலைவராய் இருந்த  மணவிற்  கூத்த காலிங்கராயன் ஆவான்.இவன் இக்கோயிலைக் கட்டிய செய்தி இக்கோயிலில் பொறிக்கப் பெற்றுள்ள,

``அருமறைமா தாவி னறக்காமக் கோட்டந்
திருவதிகைக் கேயமையச் செய்து - பெருவிபவங்
கண்டா னெதிர்ந்தா ரவியத்தன் கைவேலைக்
கொண்டானந் தொண்டையர் கோ.``
என்னும் வெண்பாவால் விளங்கும்.

 இக்கோயிலைப் பொன் வேய்ந்தவர் மேற்குறித்த கூத்தர் காலிங்கராயர் ஆவர். இச்செய்தியை,

``தென்னதிகை வீரட்டஞ் செம்பொனால் வேய்ந்திமையோ
பொன்னுலகை மீளப் புதுக்கினான் - மன்னுணங்கு
முற்றத்தான் முற்றுநீர் வையம் பொதுக்கடிந்த
கொற்றத்தான் தொண்டையர் கோ.

என்னும் வெண்பாவால் அறியலாம் மணவிற் கூத்த காலிங்கரயன் திருவதிகை கோயிலில் செய்த வேறு திருப்பணிகள்:  நூற்றுக்கால் மண்டபத்தை கட்டினான். மடைப்பள்ளி மண்டபம் மாளிகை,பெரிய திருச்சுற்று மாளிகை, யாக மண்டபம் இவைகளைக் கட்டினான்.இரண்டு குளங்களையும் வெட்டினான். பத்தாயிரம் பாக்கு மரங்கள் கொண்ட தோப்பினை இக்கோயிலுக்காக உருவாக்கினான்.நந்தவனம் அமைத்து விளக்கெரிக்க பசுக்களை தானம் செய்துள்ளான். பொன், வெள்ளி பாத்திரங்களை இக்கோவிலுக்கு அளித்துள்ளான்.மணவிற் கூத்த காலிங்கராயன் இக்கோயிலில் செய்துள்ள திருப்பணி மகத்தானது ஆகும். இரா.விக்ரமன்,சிதம்பரம்.


Tuesday, May 21, 2019

ஆச்சாள்புரம்.

திருஞானசம்பந்தர் திருமண கோலத்தில் ஆச்சாள்புரம் எனும் நல்லூர் பெருமணத்தில் 'காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி' என பதிகம் பாடி  தன் தாய் தந்தை சுற்றதாருடனும் திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருநீலநக்கர்,முருக நாயனார் ஆகிய நாயன்மாருடன் சிவஜோதியில் கலந்து முக்தி அடைந்தார். இங்குள்ள சிவலிங்கத்திலிருந்து ஒரு தீ பிழம்பு தோன்றியது அதில் ஒரு வாயில் தோன்றியது மக்கள் சிலர் அந்த நெருப்பு  சுடும் என பயந்து ஓடினர் நந்தி அவர்களை தடுத்து அது குளிர்ந்த நெருப்பு சுடாது என வாருங்கள் என அழைத்தார். அனைவரும் அதில் கலந்து கைலாயம் சென்றனர். இங்குள்ள அம்மன் நெருப்பிலிருந்து வந்த அனைவருக்கும் திருநீறு பிரசாதமாக வழங்கினார்.அம்மன் திருவெண்ணீற்றுமை என அழைக்கப்படுகிறார்.இங்கு அம்மன் சன்னதியில் விபூதி பிரசாதமாக வழங்கபடுகிறது.குங்குமம் தருவதில்லை.இறைவன் சிவலோகத்தியாகர் என அழைக்கப்படுகிறார்.இக்கோயிலில் விக்கிரம சோழன்,இரண்டாம் இராஜராஜன்,இரண்டாம் இராஜதிராஜன், மூன்றாம் குலோத்துங்க சோழன்,மாறவர்மன் பராக்ரமபாண்டியன்,முதல் சடையவர்ம சுந்தரபாண்டியன்,ஏகோஜி மகராஜா ஆகியோர் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இரா.விக்ரமன், சிதம்பரம்.

Friday, May 17, 2019

சிதம்பரம் நடராஜர் கோயில் மேற்கு கோபுரம்.


இந்த கோபுரம் கி.பி.1251முதல் 1268வரை ஆட்சி செய்த முதல் சடையவர்ம சுந்தர பாண்டியனால் கட்டப்பட்டது. இது சுந்தரபாண்டியன் திருநிலை எழு கோபுரம் என கல்வெட்டில் கூறப்படுகிறது.இவன் நடராஜர் கோயிலிலும் ஸ்ரீரங்கம் கோயிலிலும் பொன் வேய்ந்துள்ளான். அதனால் இவன் பொன்வேய்ந்த பெருமாள் என அழைக்கப்பட்டான். நடராஜ பெருமானை வணங்கி பல துலாபார தானங்கள் செய்தான்.இவன் பெயரில் சுந்தர பாண்டியன் திருத்தோப்பு,சுந்தர பாண்டியன் தெங்கு திருவீதி அமைந்திருந்தன.இவன் திருப்பணி செய்த கோயில்களில் தனது படிமங்களை அமைத்துள்ளான்.இக்கோபுரத்தில்  வணங்கும் நிலையில்  இவனது சிற்பம் உள்ளது.இச்சிற்பம் அருகில் மற்றொரு சிற்பம் இவனது அமைச்சராகவோ அல்லது தலைமை சிற்பியாக இருக்கலாம்.இவனது வாழ்த்துப்பா
"வாழ்க கோயில் பொன்வேய்ந்த மகிபதி
வாழ்க செந்தமிழ் மாலை தெரிந்தவன் வாழ்க மண்டலம் யாவையுங் கொண்டவன்
வாழ்க சுந்தர மன்னவன் தென்னனே" என்பதாகும்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.





Saturday, May 11, 2019

சிதம்பரம் கல்யாண சுந்தரர் வீரபத்திர சுவாமி கோயில்

வீரபத்திரர் அழகாக அமர்ந்த  கோலத்தில் காட்சி தருகிறார் அம்மன் கதம்பவன வாகினி சன்னதி தெற்கு நோக்கி அமைந்திருக்கின்றது.இந்த கோயிலை இராஜேந்திர சோழன் கட்டியதாக கூறுகிறார்கள்.கோயிலின் வெளியே வணங்கும் மன்னரின் உருவம் இராஜேந்திர சோழன் என கூறுகின்றனர்.ஆனால் அந்த சிற்பம் நடராஜர் கோயில் கீழை கோபுரத்தில் உள்ள கோப்பெருஞ்சிங்கன் போல  உள்ளது ஆனால் வயிறு பெரிதாக இல்லை.கோயிலை சுற்றி சிதைந்த கல்வெட்டுகள் உள்ளன.பல சிற்பங்களும் உள்ளன. கருங்கல் சுவர்களும் சிதறிக் கிடக்கின்றன. இந்த வீரபத்திரர் திருமண வரம் தருபவராக இருப்பதால் கல்யாண சுந்தர வீரபத்திரர் என அழைக்கப்படுகிறார்.திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து வேண்டுகிறார்கள்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

Thursday, May 2, 2019

சிதம்பரம் இளைமையாக்கினார் கோயில்

திருநீலகண்ட நாயனாரும்,கணம்புல்ல நாயனாரும் வாழ்ந்து முக்தி பெற்ற கோயில்.சிவபெருமான் திருநீலகண்டரையும்  அவரது மனைவியையும் குளத்தில் முழ்க செய்து முதுமை கோலத்தில் இருந்து இளைமை கோலத்திற்கு மாற்றியதால் இளைமையாக்கினார் கோயில் என பெயர் பெற்றது.கணம்புல்ல நாயனார் கணம்புல்லை விற்று விளக்கேற்றும் பணி செய்து வந்தார்.ஒருநாள் புல்லை விற்க முடியாமல் நெய் வாங்க பணம் இல்லை அன்று அந்த புல்லை விளக்காக எற்றினார் அவை சீக்கிரம் அனைந்து விட்டதால் தன் தலை முடியை திரியாக திரித்து அதில் தீயை மூட்டி விளக்காக எறியவைத்தார். இதை  கண்ட சிவபெருமான் பார்வதி தேவியோடு இடப வாகனத்தில் வந்து அவரை காப்பாற்றி முக்தியளித்தார். இக்கோயில் முதலில்  புலிக்கால் முனிவரால் லிங்கம் அமைத்து வழிபட்டது.இறைவன் திருப்புலீஸ்வரர் அம்மன் திரிபுரசுந்தரி. இக்கோயில் திருப்புலீஸ்வரம் என அழைக்கப்பட்டது.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...