Tuesday, October 29, 2019

சிவஞான கண்டராதித்தர் மேற்கெழுந்தருளிய தேவர்

கண்டராதித்த  சோழன் 'மேற்கெழுந்தருளிய தேவர்' என அழைக்கப்படுகிறார்.மேற்கே போருக்கு சென்றபோது இறந்துவிட்டார் என கருதினார்கள். ஆனால் சதாசிவப் பண்டாரத்தார் அவற்றை் ஏற்கவில்லை 'மேற்கெழுந்தருளிய' என்ற அடைமொழி இறந்த செய்தியை உணர்த்த வில்லை என்றும் பண்டைய சோழ மன்னர்கள் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என சங்க நூல்களிலும் ஆற்றூர் துஞ்சின தேவர், பொன்மாளிகை துஞ்சின தேவர் என கல்வெட்டுகளிலும் குறிக்கப்பட்டுள்ளனர்.சங்க இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் காணப்படும் துஞ்சிய(இறந்த) என்ற அடைமொழி இல்லாமையால் அதற்கு பொருள் வேறு இருக்கும் என்றும் அவை சோழ நாட்டிற்கு மேற்கேயுள்ள நாடுகளுக்கு இவ்வரசன் தலயாத்திரை சென்று திரும்பி வராமையை குறிக்கலாம் என்கிறார்.பெங்களூர் மாவட்டத்தில் பெரிய மழவூரில் காணப்படும் கல்வெட்டொன்று இவனைச் 'சிவஞான கண்டாரதித்தர்'  என குறிப்பிடுக்கின்றது.இவனுக்கு மைசூர் இராச்சியத்தின் தென்பகுதியில் இருந்த கங்கநாட்டிற்கும் ஏதேனும் ஒரு தொடர்பு இருத்தல் வேண்டும் உறுதியாகின்றது.மேலூம் அக்கல்வெட்டு சிதைந்துள்ளதால் இவனைப் பற்றி செய்திகளை அறிய இயலவில்லை என்கிறார்.எனினும் இவன் படைத்தலைவன் ஒருவன் அந்நாட்டு மழவூர் சிவன் கோயிலில் கண்டராதித்தவிடங்கரையும் உமா பரமேசுவரியாரையும் எழுந்தருளுவித்து வழிபாட்டிற்கு நிவந்தம் அளித்துள்ளான். மைசூர் இராச்சியத்தில் நந்தி எனும் ஊரில் போகநந்தீசுவரர் கோயிலில் ஒரு அரசர் படிமம் உள்ளது அது சோழ மன்னரது படிமம் என அழைக்கப்படுகிறது.அது யோகத்தில் வீற்றிருக்கும் நிலையில் அமைக்கப்பெற்றுள்ளது. கோனேரிராசபுரத்திலுள்ள கண்டராதித்தன் படிமத்திற்கும் அதற்கும் வேறுபாடு மிகுதியாக காணபடவில்லை.எனவே அது நம் கண்டராதித்த சோழனை நினைவு கூர்வதற்கு வைக்கப்பட்டு உருவச்சிலையாதல் வேண்டும் என்கிறார் சதாசிவப்பண்டாரத்தார். மழவூர் என்பது தற்போது சன்னபட்ன என்றும் அதற்கு அருகே பெரிய மழவூர் என்பது தொட்டமல்லுர் என அழைக்கப்படுகிறது அங்குள்ள கைலேஸ்வரர்   கோயிலே மேலே குறிப்பிட்ட பெரிய மழவூர் கோயிலாகும்.சிறிய மழவூர் தற்போது மாலுர்பட்ன என அழைக்கப்படுகிறது. இராஜராஜ சோழன் இக்கைலேஸ்வரர் கோயிலை புதுப்பித்துக் கட்டியிருக்கலாம். கல்வெட்டுகளில் முடிகொண்ட சோழ மண்டலத்து கரிகால சோழ வளநாட்டு பெரிய மழவூர் இராஜேந்திரசிம்ம சதுர்வேதிமங்கலத்து இராஜேந்திரசிம்ம ஈச்சரமுடையார் கோயில் என குறிக்கப்பட்டுள்ளன.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.




No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...