Monday, March 4, 2019

சுந்தரர் அவதார இல்லம் (திருக்கோயில்)..

சுந்தரர் பிறந்த வீடு திருநாவலூர் கோயிலை ஒட்டி வடக்கு பக்கத்தில் அமைந்திருந்தன.கோயிலில் பூஜை செய்யும் ஆதி சைவ அந்தணர் குடும்பம் என்பதால் கோயில் அருகில் வீடு அமைந்திருந்தது. பிறகு அந்த இடத்தில் சுந்தரர் மடம் அமைந்திருந்தன பின்பு அவையும் இடிக்கப்பட்டு தற்போது சிவனடியார்களால் சுந்தரருக்கு புதிய கருங்கல் கோயில் கட்டப்பட்டு வருகிறது.இதற்கு முன்பாகவே திருநாவலுர் கோயிலின் உள்ளே சுந்தரருக்கு பழமையான தனி சன்னதி உள்ளது.கைலாயத்தில் இறைவனுக்கு பூசை செய்யும்  சிவனடியார்களில் ஒருவராக இருந்த ஆலால சுந்தரர் ஒரு நாள் நந்தவனத்தில் பூஜைக்கு பூக்களை பறித்துக்கொண்டு இருக்கும் போது அங்கு பார்வதிக்கு தொண்டு செய்யும் பெண் அடியார்களான அநிந்திதை,கமலினி மேல் காதல்  கொள்ள அவர்களும் சுந்தரர் மீது காதல் கொண்டனர்.இதை அறிந்த  இறைவன் சுந்தரரை நீ பூலோகத்தில் மானிடராய் பிறந்து அம்மகளிரை மணந்து இன்ப துன்பங்களை அனுபவித்து மீண்டும் இங்கு வருவாயாக என்றார்.இதை கேட்டு சுந்தரர் மனம் கலங்கி நான் மானிடராய் பிறந்து மயங்கும் போது என்னை தடுத்தாட்கொள்ள வேண்டும் என வேண்டினார் இறைவனும் அவ்வாறே ஆகட்டும் என்றார். பூலோகத்தில் சுந்தரர் நம்பியாரூராகவும்,அநிந்திதை சங்கிலியாராகவும், கமலினி பரவையாராகவும் பிறந்தனர். திருமுனைப்பாடி நாட்டில் சடையானர்க்கும் இசைஞானியார்க்கும் மகனாய் பிறந்தார் நம்பியாரூரார். நரசிங்கமுனைராயர் எனும் சிற்றரரசரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்டார்.பின்பு திருமணம் நடைபெறும்போது இறைவனால் தடுத்தாட் கொள்ளப்பட்டு பித்தா பிறைசூடி பெருமானே எனும் முதல் தேவாரப் பதிகம் பாடினார்.பிறகு பல தலங்களை பாடி இறைவன் சுந்தரரிடம் பல திருவிளையாடல் நிகழ்தினார். பரவையார்,சங்கிலியாரை மணந்து பரவையாரிடம் இறைவனையே தூதாக அனுப்பியவர் சுந்தரர்.பிறகு சேரமான் பெருமானுடன் நட்பு கொண்டு மதுரை சென்று பாண்டியன் கோச்சடையன் ரணதீரன் அவன் மருமகன் சோழன் ஒருவன் மற்றும் சேரமான் பெருமான் முன்னிலையில் சொக்கநாதர் கோயில் மற்றும் திருப்பரங்குன்றம் சென்று தேவார பதிகம் பாடினார். சேரமான் பெருமானுடன் திருவஞ்சைகளம் சென்று இப்பிறப்பு போதும் என்னை கைலாயத்திற்கு அழைத்து கொள்க என இறைவனை வேண்டி பதிகம் பாடினார். இறைவன் தேவர்களை அனுப்பி சுந்தரரை வெள்ளை யானையில் அழைத்து வர கட்டளையிட்டார்.வெள்ளை யானையில் சுந்தரர் போகும் போது சேரமான் பெருமானை நினைத்தார்
அவரும் அங்கு வந்து அந்த காட்சியை கண்டு சேரமான் பெருமான் தன் குதிரையின் காதில் பஞ்சாசர மந்திரம்  ஓத அது வெள்ளை யானையை முந்திக்கொண்டு கைலாயத்திற்கு சென்றது.அங்கு பல வாயில்களை கடந்து திருகண்வாயிலை அடைந்தனர்.அங்கு சேரமான் பெருமானை நந்திதேவர் தடுத்தார். சுந்தரர் உள்ளே சென்று சிவபெருமான் பார்வதியை வணங்கி சேரமான் பெருமான் வருகையை தெரிவித்தார். இறைவனும் நந்தியை விடுவிக்குமாறு கூறினார்.பின்பு சேரமான் பெருமான் இறைவன் மீது திருக்கைலாய ஞானவுலா பாடி சிவகணங்களின் தலைவர் ஆனார்.சுந்தரரும் முன்பு செய்த சிவதொண்டு பணியை தொடர்ந்தார்.சிவபெருமான் அருளால் பரவையாரும்,சங்கிலியாரும் முன்பு பார்வதிக்கு செய்த சேவையை தொடர்ந்தனர்.இதை சுந்தரர் வரலாற்றில் விரிவாக காணலாம்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.



No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...