Tuesday, July 21, 2020

தேவசேனாதிபதி முருகன் திருமேனி கங்கை கொண்ட சோழபுரம்

தேவசேனாதிபதி முருகன் திருமேனி.
போர் கோலம் கொண்ட இந்த தேவசேனாதிபதி திருமேனி இராஜேந்திர சோழன் எனும் வீர சேனாதிபதி போர் வீரனாகவும், சேனைகளின் தலைவனாகவும் இருந்து பல நாடுகளை வென்று பல மன்னர்களை வென்றதன் நினைவாக இராஜேந்திர சோழன் இந்த திருமேனியை எடுத்துள்ளான்.இந்த திருமேனி கி.பி.1035 ஆம் ஆண்டு செய்தளிக்கப் பட்டதாக கூறுகின்றனர்.
இந்த திருமேனி தலையில் சீரிடா மகுடம் தரித்து காதுகளில் மகர குண்டலங்கள் அணிந்து,கழுத்தில் முத்து வடங்களை அணிந்து. திருக்கரங்களில் நான்கில் வலது மேல் கையில் சக்தி வேல்படையும்,இடது மேல் கையில் குக்குடமும் (சேவல்)கீழ் வலக்கையில் வாள் இருந்துள்ளது. இடது கீழ் கையில் கேடயம் உள்ளது.
குமரன் எனும் தேவசேனாதிபதியின் இளமை தோற்றம்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

Monday, July 13, 2020

இராஜேந்திர சோழ விண்ணகரம்.

இராஜேந்திர சோழனுக்கு திறை செலுத்தும் சிற்றரரசனாக இருந்த சேர அரசன் இராசசிங்கன் பாண்டிய நாட்டில் மன்னார் கோயிலில் ஒரு விண்ணகரம் எடுப்பித்து அதற்கு இராஜேந்திர சோழ விண்ணகரம் என பெயரிட்டான்.தற்போது இராஜகோபால சுவாமி கோயில் என அழைக்கப்படுகிறது. இராஜேந்திர சோழன் 24 ஆம் ஆண்டு ஆட்சியில் இக்கோயிலுக்கு தேவதானமாக நிலம் அளித்தான்.அதை இவன் மகன் ஜடாவர்மன் சுந்தரசோழ பாண்டியனுடைய பதினைந்தாம் ஆட்சி ஆண்டிலிருந்து அனுபவிக்கப்பட வேண்டும் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. சடையவர்மன் சுந்தரசோழப் பாண்டியன் பல திருப்பணிகள் செய்து நிவந்தம் அளித்துள்ளான்.மாறவர்மன் சுந்தர பாண்டியன் திருப்பணி செய்து நிவந்தம் அளித்துள்ளான்.நாயக்க மன்னர்கள் காலங்களிலும் திருப்பணி செய்யப்பட்டுள்ளன.குலசேகர ஆழ்வார் இங்கு முக்தியடைந்தார். நாலாயிரதிவ்யபிரபந்திற்கு பன்னிரெண்டு ஆயிரப்படி உரை எழுதிய அழகிய மணவாள ஜீயர் அவதார திருக்கோயிலாகும்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

Sunday, July 5, 2020

பொதுகே அரிக்கமேடு வணிக நகரம்.

தமிழகத்தில் மாமல்லபுரம்,காவிரி பூம் பட்டினம்,கொற்கை,மரக்காணம் போன்ற துறைமுகங்கள் போல பொதுகேயும் ஒரு சிறந்த துறைமுகமாக இருந்ததுள்ளது. வெளிநாட்டு பயணிகளான தாலமி,பெரிப்ளூஸ் இத்துறையில் கப்பல்கள் வந்து தங்குமிடம் என்றும் பொதுகே என குறிப்பிட்டனர். முக்கியமாக யவனர்களே அதிகமாக வசித்துள்ளனர்.சமண மதமும்,புத்த மதமும் இங்கு இருந்துள்ளன.அருகன் வழிப்பாட்டால் அருகன் மேடு அரிக்கமேடு ஆனதாகவும். ஆற்றங்கரையில் அமைந்துள்ளதால் அருக்கு மேடு என்றும் பெயர் வந்ததாக கூறுவர்.கலித்தொகையில் வரும் பாடலில்"புள்ளிக் கள்வன் புனல்சேர் பொதுக்கம்" பொதுக்கம் என்பது நெய்தல் நிலத்தை சார்ந்த கடல்கரைப் பகுதியாக கூறப்பட்டுள்ளது என அறிஞர் கூறுவர்.பூம்புகாரில் சோழ மன்னர்கள் வசித்ததால் புலவர்கள் பாடலால் அந்நகரை பற்றிய குறிப்புகள் இலக்கியத்தில் உள்ளன.பொதுகே இலக்கியங்களில் இடம்பெறவில்லை. ஆனால் பூம்புகாரை விட அதிக கட்டிட சிதைவுகள்,பொருட்கள் இங்கு தான் கிடைத்துள்ளன.காக்காயந் தோப்பு பகுதியில் சமண தீர்த்தங்கரர் சிலை ஒன்று கிடைத்துள்ளது.அச்சிலையை வைத்து பிரமன் கோயில் என வழிபடுகின்றனர்.சாக்கியன் தோப்பு காக்காயந் தோப்பு என மாற்றம் அடைந்தது.வீராம்பட்டினம் எனவும் இப்பகுதி அழைக்கப்படுகிறது. வணிகர்கள் ஒரு சிறு காவல்படையை தங்களுடன் வைத்து இருந்தனர்.அவர்கள் எங்கு வணிகம் செய்ய சென்றாலும் அவர்களை அழைத்து செல்வார்கள் அதனால் அவர்கள் வசித்த பகுதி வீராம்பட்டினம் என அழைக்கப்படுகிறது.என சதாசிவப் பண்டாரத்தார் குறிப்பிடுகிறார்.மேலும் யவனர்கள் என அழைக்கப்படும் இத்தாலி ரோமானியர்கள் கிபி.50.முதல் 200 வரை இங்கு பண்டகசாலை வைத்து வணிகம் புரிந்த வணிகர்கள் எனவும் சங்ககால சோழ இராச்சியத்தில் உள்ள வீராம்பட்டினங்களில் ஒன்று இவை என பண்டாரத்தார் குறிப்பிடுகிறார்.
1941 முதல் 1992 வரை அரிக்க மேட்டில் செய்த பல்வேறு அகழ் வாய்வுகளில் மட்கலன்கள், மணி வகைகள், அணிகலன்கள், கண்ணாடிப் பொருட்கள், நாணயங்கள், உறைகிணறுகள், சாயத்தொட்டிகள், விளையாட்டுப் பொருட்கள் மற்றும் ரோமானிய விளக்குகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.சங்கு வளையல்கள், காதணிகள், வண்ணம் தீட்டப் பயன்படும் குச்சிகள், மரச்சீப்பு, மரசுத்தி,கயிறு,சுடுமண் விலங்கு பொம்மைகள், நீலக் கண்ணாடிக் கோப்பைத் துண்டுகள், தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், ஆம்போரா சாடி போன்றவை கிடைத்துள்ளன. பண்டைய காலங்களில் மத்தியத் தரைக்கடல் நாடுகளில் மது, ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை சேமித்துவைக்க ஆம்போரா ஜாடிகளைப் பயன்படுத்துவர். இந்த ஜாடிகளை ரோமானியர்கள் தமிழகத்துக்குக் கொண்டுவந்திருக் கின்றனர். இது, மென்மையான களிமண்ணால் வனையப்பட்டு, பழுப்பு நிறத்திலும் இளஞ்சிவப்பு நிறத்திலும் காணப்படும்
ஆம்போரா ஜாடியின் அடிப்பகுதி கூர்மையாகவும், கழுத்துப் பகுதியில் இருபுறமும் கைப்பிடிகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த ஜாடிகள் கி.மு. 100-ல் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்று
கூறபடுகிறது.இதுபோலவே, மத்தியத் தரைக்கடல் நாடுகளில் செய்யப்பட்டு வந்த ரௌலெட்டே எனும் மட்கலன்கள் விசேஷமானவை. இந்தக் களிமண் இந்தியாவில் கிடைக்காது. உருக்கு மற்றும் சாம்பல் நிறத்தில் காணப்படும் இந்த மட்கலன்கள் ரோமானியர்களால் தமிழகத்துக்குக் கொண்டுவரப் பட்டிருக்கின்றன.இந்த மட்கலன்கள் தமிழகத்தில் பல இடங்களில் கிடைத்திருக்கிறது.களிமண் கூஜா ஒன்றும் அரிக்கமேட்டு ஆய்வில் கிடைத்துள்ளது. குளிர்ந்த நீரை சேமித்துவைத்துக் குடிக்கப் பயன்படுத்தப்படுட்டது.நெசவு தொழில் சாலைகளில் இருந்துள்ளன.அவை மெல்லிய(மஸ்லின் துணி) வண்ணத்துணிகளை சாயம் நனைத்து தயாரித்துள்ளார்.அதனால் சாயத்தொட்டிகள் இங்கு பல உள்ளன. இத்துணிகள் அதிக அளவு ஏற்றுமதி செய்யப்பட்டது.ரோமானியர்கள் இதை விரும்பி வாங்கினர்.சிந்வெளி மக்கள் போல கழிவறை,குளியலறை அமைத்திருந்தனர். கழிநீர் வாய்க்கால் சந்திக்கும் இடம் இங்கு கிடைத்துள்ளது.பவளம் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்டது. மஸ்லின் துணி, சங்கு வளையல்கள், சுடுமண் பொருட்கள்,யானை தந்த பொருள்கள்,கண்ணாடி மணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டது.அரிட்டைகள், ரௌலெட்டெட் மண்பாண்டம், யவன மது அடங்கிய ஆம்போரா ஜாடி கோமேதக மணி ஆகிய பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டது. இந்தியாவில் அரிக்கமேட்டில் தான் அரிட்டைன் மண்பாண்ட ஓடுகள் கிடைத்ததுள்ளன. அவை கி.பி.50 வரை மட்டுமே இத்தாலியில் தயாரிக்கப்பட்டன.இங்கு கிடைத்த அரிட்டைன்களில்  VIBIE, CAMVRI, ITTA என முத்திரை உள்ளது.இவை இதை தயாரித்த தொழிற்சாலை அல்லது தொழிலாளர்கள் பெயராக இருக்கலாம்.பீங்கான் வகை  செலெடன் மட்கலன்கள் இங்கு கிடைத்துள்ளதால் சீனாவுடன் வணிகம் இருந்ததுள்ளது.வணிகர்கள் பலரும் வணிகம் புரியும் இடத்தில் நிரந்தரமாக குடியிருப்புகளை அமைத்துக் கொண்டனர்.இவ்விடம் புதுச்சேரி செல்லும் வழியில் அரியாங் குப்பத்திலிருந்து வீராம்பட்டினம் செல்ல வேண்டும். அரிக்கமேட்டில் இப்படத்தில் உள்ள கட்டிட சிதைவுகள் இல்லை ஆய்வாளர்கள் அவற்றை ஆய்வு செய்து மூடிவிட்டனர்.தற்போது பிரெஞ்சு அரசு 300 வருடம் முன்பு கட்டப்பட்ட சிதைந்த தேவாலயம் மட்டுமே உள்ளது.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...