Sunday, September 22, 2019

சிதம்பரம் சோழர் அரண்மனை

சோழ மன்னர்கள் அனைவரும் தில்லையை ஒரு சிறந்த தலமாக போற்றி வந்தனர்.நடராஜ பெருமானை தம் குல தெய்வமாக வழிபட்டனர். சோழர்கள் ஒரு குறிப்பிட்ட அரண்மனையில் மட்டும் வசிக்கவில்லை சிறந்த தலங்கள் உள்ள ஊர்களிலும் பிற முக்கியமான ஊர்களிலும் அரண்மனை அமைத்து அங்கு தங்கி இருந்தனர். சோழ மன்னர்கள் அரண்மனை இல்லாத ஊர்களில் பெரிய மண்டபங்களில் தங்கியிருந்தனர். அவை கொட்டகாரங்கள் என அழைக்கப்பட்டன என பண்டாரத்தார் குறிப்பிடுகிறார்.சிதம்பரத்தில் கொற்றவன் குடி எனும் பகுதியில் தான் சோழர் அரண்மனை இருந்துள்ளன. இராஜேந்திர சோழன் கரந்தை செப்பேட்டில் "நமக்கு (இராஜேந்திர சோழருக்கு) யாண்டு எட்டாவது, நாள் நூறேழி நால் பெரும்பற்றப்புலியூர் விட்ட வீட்டின் உள்ளால் மாளிகையின் கீழை மண்டபம் இராஜேந்திர சோழ ப்ரமாதிராஜனில் நாம் உண்ணாவிருந்த" பொழுது என குறிக்கப்பட்டுள்ளது.இராஜேந்திர சோழன் பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்) வீட்டின் உள்ளால் மாளிகையின் கீழை மண்டபம் இராஜேந்திரசோழபுர பிரம்மாதிராஜனில் அமர்ந்து இருந்த  போது கரந்தை செப்பேட்டு ஆவணத்தை வெளியிட்டுள்ளான்.அது தன் தாயின் பெயரில் திருபுவனமாதேவி சதுர்வேதி மங்கலம் அமைக்க ஆணையிட்டதை குறிப்பிட்டுள்ளது.இந்த செப்பேட்டினால் எட்டாம் ஆட்சி ஆண்டில் இராஜேந்திர சோழன் இந்த அரண்மனையில் தங்கியிருந்தை அறியமுடிகிறது.கி.பி.1120ஆம் ஆண்டு விக்கிரமசோழன் தில்லை அரண்மனையில் தங்கி இருந்தான் என்று ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.விக்கிரம சோழன் காட்டுமன்னார்குடியிலும் ஒரு அரண்மனை அமைத்து இருந்தான்.சோழ மன்னர்கள் அனைவரும் சிதம்பரம் அரண்மனையில் தங்கி தில்லை பெருங்கோயிலில் திருப்பணி செய்து வந்தனர்.1951ஆம் ஆண்டு இங்கு தொழில் கல்வி கூடம்  கட்டி அதற்கு இடம் பற்றாமல் இதை இணைத்து மற்றொரு கட்டிடம் கட்ட பள்ளம் தோண்டும்போது ஒரு மண்பானையில் மூவாயிரம் மேற்பட்ட செப்பு நாணயங்கள் கிடைக்க பெற்றன.அதை கல்வெட்டு பேரறிஞர் தி.வை.சதாசிப் பண்டாரத்தாரும், பேராசிரியர் சத்திய நாதய்யரும் ஆராய்ந்து அவை முதலாம் இராஜராஜ சோழன் கால நாணயங்கள் என கண்டறிந்து கூறினர்.தற்போதும் சில வருடங்கள் முன்பு ஒருவர் இப்பகுதியில் வீடு கட்ட பள்ளம் தோண்டும் போது ஒரு அம்மன் சிலையும் சில காசுகளும் கிடைத்துள்ளன.இங்கு அரண்மனை அமைத்த சோழர்கள்  நான்கு விதப்படைகளை இதன் எல்லையில் அமர்த்திக் கொண்டு ஆட்சி புரிந்தார்கள்.கி.பி.5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிம்மவர்மனும் இந்த கொற்றவன்குடியில் தான் அரண்மனை அமைத்து ஆட்சி புரிந்தான்.கி.பி.7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் திருவேட்களத்தில் தங்கி இவ்வழியாக தான் தினமும் நடராஜ பெருமானை தரிசிக்க சென்று வருவார்.கி.பி.14ஆம் நூற்றாண்டில் சந்தான குறவர்களில் ஒருவரான உமாபதி சிவாச்சாரியாரும் இங்கு தான் வாழ்ந்து மறைந்து சமாதி கோயில் கொண்டுள்ளார். கொற்றவன்குடி கல்வெட்டுகளில் குறவன்குடி, கோட்டன்குடி,பவித்திர மாணிக்கநல்லூர் என குறிக்கப்பட்டுள்ளது.சோழர்களின் வாழ்விடங்களை அழித்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் இந்த அரண்மனை மட்டும் விட்டு வைத்திருப்பானா இவையும் அழித்து தான் இருப்பான். நான் முன்பு எழுதிய பதிவில் சிதம்பரத்தில் மூன்றாம் குலோத்துங்க சோழன் கட்டிய ஐயனார் கோயில் உள்ளே வேறொரு இடத்திலிருந்து கொண்டு வரப்பபட்ட சிற்பங்கள் உள்ளன என கூறினேன் அவை காளி,சிவ லிங்கம்,நந்தி, சண்டிகேசுரர்,பைரவர் ஆகிய சிற்பங்கள் இந்த அரண்மனை அழிந்த பின்பு இங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட சிற்பங்களாக கூட அவை இருக்கலாம்.தற்போது இங்கு இடங்களை தோண்டி ஆராய்ச்சி செய்ய இடமும் இல்லை கட்டிடங்களும் வீடுகளும் பெருகிவிட்டன.கங்கை கொண்ட சோழபுரம் கிராம பகுதி என்பதால் அங்கு இராஜேந்திர சோழன் அரண்மனையின் அடித்தளம் கிடைத்துள்ளன.சிதம்பரம் நகர்ப்புற பகுதி என்பதால் சோழர் அரண்மனையின் அடித்தளம் கூட எஞ்சி நிற்கவில்லை.பிற்காலத்தில் இங்கு வீடுகளோ கட்டிடங்களோ கட்ட ஆழமாக பள்ளம் தோண்டினால் இங்கு அரண்மனை இருந்த தடயங்களை கிடைக்கலாம்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.









1 comment:

  1. அருமையான பதிவு.
    நல்ல ஆராய்ச்சி...வாழ்த்துக்கள்....

    ReplyDelete

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...