Tuesday, July 9, 2019

ஆதித்த சோழன் பள்ளிபடை கோயில்.(இந்திர விழா)

ஆதித்த சோழன் பள்ளிப்படை கோயில்.
பராந்தக சோழன் தன் தந்தை ஆதித்த சோழன் நினைவாக காளகஸ்தி அருகிலுள்ள தொண்டைமாநாடு எனும் ஊரில் ஆதித்தேசுவரம்,கோதண்ட ராமேசுவரம் எனும்  பள்ளிபடைக் கோயிலை எடுப்பித்தான்.இச்சமாதி கோயிலில் நடத்தப்படும் திருவிழாக்கள் இரண்டு ஆதித்த சோழன் பிறந்த நட்சத்திரமான சதயநாள் திருவிழாவும், இந்திரவிழாவும் ஆகும்.புரட்டாசி மாதம் கேட்டை நட்சத்திரம் தொடங்கி மன்னரின் சதயநட்சத்திரம் அன்று முடிய வேண்டும் எனவும் இத்திருவிழா ஏழு நாட்கள் நடைபெற வேண்டும் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. இந்திரவிழா கடைசி நாளான தீர்த்தமாடு விழா மன்னரின் பிறந்த  சதயநட்சத்திரத்துடன் இணைந்து நடைபெறுகிறது.இந்த ஏழு நாட்களும் அறுசமயத்தவசிகள் 200 பேர், அந்தணர் 300 பேர்,அன்பரான பல சமயத்தவர் 500 பேர் என மொத்தம் 1000 பேர் கோயிலில் உணவு உண்பதற்கு நூற்றைந்து கழஞ்சுபொன் பராந்தக சோழனால் கொடுக்கப்பட்டது.இந்த ஏழுநாட்களும் இறைவனுக்கு நீராடல்,பூச்சூடல், உணவு படைத்தல் போன்றவை நடைபெறுகின்றன.இந்திர விழாவில் நடைபெறுவது போல கூத்தும். பாட்டு போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.இந்த ஏழுநாட்களும் சிறப்பாக இரவில் விளக்குகள் எரிக்கப்படுகின்றன. இந்திர விழாவில் கடைசியில் கடலாடு விழா போல இக்கோயிலில் இறைவன் காளகஸ்தி சுவர்ணமுகி ஆற்றிற்கு கொண்டு செல்லப்ட்டு தீர்த்தவாரி நடைபெறுகின்றன.பின்பு திருவமுது படைக்கபடுகிறது.புரட்டாசி மாதம் மழைகாலம் என்பதால் இங்கு இந்திரவிழா நடைபெறுகின்றன.ஏன் இந்திரவிழா இங்கு நடைபெறுகிறது என்றால் சங்ககால மன்னன் ஆய் ஆண்டிரன் இறந்தவுடன் இந்திரனுடைய மாளிகையில் அவனை வரவேற்க முரசு அறையப்பட்டதாம். சிலப்பதிகாரத்தில் கண்ணகி செங்குட்டுவனுக்கு காட்சி கொடுத்து பாண்டியன் நெடுஞ்செழியன் நல்லவன் அவன் என் தந்தை போன்றவன் அவன் இந்திரன் கோயிலில் விருந்தினராக ஆகிவிட்டான் என கூறினாள். இரண்டாம் இராஜேந்திர சோழன் தன் மெய்க்கீர்த்தியில் தம் தமையன் முதலாம் இராஜாதிராஜன் பற்றி கூறும்போது அவன் தன்னுடன் போரிட்ட மன்னரை எல்லாம் இந்திரலோகத்திற்கு அனுப்பிட்டான் என்று கூறுகிறான்.இரண்டாம் இராஜேந்திரன் காலத்து நடுகல் ஒன்று இறந்த போர்வீரர்கள் இந்திரலோகத்தில் இரம்பை கவரி வீச ஒய்யாரமாக அமர்ந்து இருந்ததை காணமுடிகிறது என்கிறது.ஆகவே வீர மன்னர்களும் போரில் வீரமரணம் அடைந்த மன்னர்களும் வீரர்களும் இந்திரலோகத்தில் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பது நம்பிக்கை. இவ்வாறு பல போர்களில் வெற்றிப் பெற்று சோழநாட்டை கைப்பற்றி ஆட்சி செய்து  விரிவு படுத்திய ஆதித்த சோழனும் இந்திரலோகத்தில் விருந்தினன் ஆகினான் என்பது நம்பிக்கை.அதன் நினைவாக இங்கு இந்திரவிழா கொண்டாட படுகிறது.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.
சான்றுகள் :1.திரு.ராணி(பூம்புகார் வரலாற்று கண்ணோட்டம்)
2.பிற்கால சோழ வரலாறு(சதாசிவப்பண்டாரத்தார்.

No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...