Saturday, October 27, 2018

பூம்புகார் தெய்வம் சம்பாபதி அம்மன்

பண்டையக்காலத்தில் சோழர்களின் தலைநகர் உறையூரும் துறைமுகம் காவிரி பூம் பட்டினமும் விளங்கியது.இங்குள்ள சம்பபாதி அம்மன் கோயிலில் சங்ககால சுதை சிற்பங்களும் செங்கல் கோயிலும் உள்ளது.  மணிமேகலையில் வரும் குச்சரக் குடிகை இதுவேயாகும்.இக்கோயிலில் தான்  மணிமேகலை உதயகுமாரனுக்கு பயந்து ஒளிந்து கொண்டாள்.அனைவருக்கும் முக்காலத்தை கூறும் கந்திற்பாவை என்னும் தெய்வம் மணிமேகலைக்கு எதிர்காலத்தை கூறியது.அத்தெய்வம் இக்கோவிலில் ஒரு தூணில் இருந்ததாக மணி மேகலை குறிப்பிடுகிறது.இக்கோயிலின் பின்புறம் சக்கரவாளக் கோட்டம் எனும் சுடுகாடு இருந்தது.இங்குள்ள சுதை சிற்பம் சதுக்க பூதங்களாகும்.சாய்க்காடு என்பதும் இவ்வூரின் பழைய பெயராகும்.                                  சம்பாபதி அம்மன் வரலாறு: பரதகண்டத்தை உள்ளடக்கிய நாவலந் தீவைக் காக்கும் தெய்வமாய் மேருமலை உச்சியில் தோன்றிய சம்பு எனும் தெய்வம் முக்காலத்தில் அரக்கர்களால் இந்நிலத்தார்க்கு(பூம்புகார் ) ஏற்பட்ட துயரத்தினைக் கேட்டு அங்கிருந்து தென்திசை நோக்கி வந்து இந்த நகரத்தில் தவம் செய்தமையால் இவ்வூரிற்கு சம்பாபதி என்ற பெயர் உண்டாயிற்று.சூரிய குலத்தில் தோன்றிய காந்தன் என்ற மன்னன் தம் நாட்டிற்கு தண்ணீர் வேண்டும் என்ற பெரு வேட்கையால் வேண்டினான் எனவும் அவன் விருப்பத்தை நிறைவேற்றும் முறையில் குடமலையில் அகத்தியர் தம் கையிலுள்ள கமண்டல நீரைக் கவிழ்த்தமையால் நேர் கிழக்கே ஓடிவந்த காவிரியாறு இந்நகரத்தின் கடலோடு கலந்து தோன்றியது.இவ்வூரில் தவம் செய்த சம்பாபதி தெய்வம் காவிரியை மகிழ்ச்சியுடன் வரவேற்று தன் மடிமீது அமர்த்திக் கொண்டு "படைப்புக் காலத்தே சம்பாபதி என என் பெயரால் அமைந்த இம்மூதுரை நின் பெயரால் வழங்கச் செய்தேன் நீ நீடுவாழ்க"என வாழ்த்தியது.சம்பபாதி என்ற ஊர் காவிரி பூம் பட்டினம் ஆனது.இந்த காவிரியின் வடக்கும் தெற்கும் அமைந்த பகுதிகளே பூம்புகார் என சதாசிவப்பண்டாரத்தார் குறிப்பிடுகிறார்.
இரா.விக்ரமன், சிதம்பரம்.







No comments:

Post a Comment

சோழ குலமாணிக்கம்

சோழகுலமாணிக்கம் என செம்பியன் மாதேவியார் அழைக்கப்டுகிறார்.இராஜராஜ சோழன் இப்பேரரசியை குலமாணிக்கமாகிய நம்பிராட்டியார் செம்பியன் மாதேவியார் என ப...