கரிகால சோழன் புதுப்புனலாட்டு விழாவை(ஆடிப்பெருக்கு) முதன்முதலில் இத்துறையில் தான் நிகழ்த்தினான். கழார் முன்துறை தற்போது கழுதக்காரன்துறையென மருவி வழங்கப்படுகிறது என சதாசிவப்பண்டாரத்தார் குறிப்பிடுகிறார்.புகார் நகர மக்கள் நீராட்டு விழாவை சிறப்புற நடத்தும் வாய்ப் புடையதாக அமைந்தது இக்கழார் முன்துறையேயாகும். இத்துறையில் நீராடச் செல்லுதற்கென அமைந்த திருமஞ்சனப் பெருவழியை தண்பதப் பெருவழி என இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். கரிகாலன் மகள் ஆதிமந்தியை மணந்த ஆட்டனத்திி என்னும் சேர அரச குமாரன் இப்புதுப் புனலாட்டு விழாவிற் கலந்து கொண்டு காவிரியில் நீராடிய பொழுது காவிரி வெள்ளத்தால் இழுக்கப்பட்டுக் கடலை அடைந்தான். இத்துன்ப நிலையில் கணவனை காணாத ஆதிமந்தி அழுதரற்றிக் கொண்டு அவனை பின் தொடர்ந்து சென்றாள்.அப்போது மருதி எனும் நங்கை ஆட்டனத்தியை காப்பாற்றி அவன் மீது காதல் கொள்கிறாள்.ஆதிமந்தி தன் கணவனை தேடி வரும்போது தான் காப்பாற்றிய ஆட்டனத்தி தான் அவள் கணவன் என அறிந்த மருதி அவளது பெருந்துயரைக் கண்டு மனமிரங்கி ஆட்டனத்தியை ஆதிமந்தியிடம் ஒப்படைத்து விட்டு தனக்கு வேறு பற்றுக்கோடு இன்மையால் தன் நெஞ்சத் துணியுடன் கடலில் குதித்து உயிர் துறந்து புகழ்ப்பெற்றாள். மருதி யென்னும் மாண்புடை நங்கையின் தன்னலமற்ற தீரச்செயலை வெளிப்படுத்தும் நிலையில் அமைந்த இடமாக இக்காலத்தில் விளங்குவது மருதப்பள்ளம் என்ற பகுதியாகும். மருதிப்பள்ளம் என்ற பெயரே பிற்காலத்தில் மருதப்பள்ளம் என மருவி வழங்கப்படுகிறது என சதாசிவப்பண்டாரத்தார் குறிப்பிடுகிறார்.இந்த ஆதிமந்தியை தான் கண்ணகி பாண்டியன் அவையில் கோப்பெருந்தேவியை நோக்கி ஏழு பத்தினி பெண்கள் பற்றி கூறும்போது ஆதிமந்தியையும் ஒரு பத்தினி பெண்ணாக இவள் வரலாற்றை கூறுகிறாள்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.
இரா.விக்ரமன்,சிதம்பரம்.